விக்கிப்பீடியா:மே 22, 2011 மலேசியாவில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒன்று கூடலில் கலந்து கொண்டோர்
தலைமை தாங்கிய சு. யுவராஜன் சிறப்பு அழைப்பாளர் அக்கினி சுகுமார்
விக்கி பற்றிய சந்தேகங்களை வினவும் தோழி
நிகழ்வின் முதல் பயனர் யோகியை அறிமுகப்படுத்தும் புன்னியாமீன்
சந்தேகங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் வல்லினம் ஆசிரியர் ம. நவீன்

மே 19, 2011 முதல் மே 22, 2011 வரை குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா சென்றிருந்த நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக சில அறிமுக நிகழ்வுகளை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. மலேசியா அன்பர்கள் இந்நிகழ்வுகளுக்காக பூரண ஒத்துழைப்பை நல்கினர்.

வானொலியில் நேர்காணல்[தொகு]

மே 20, 2011 அன்று மலேசியாவின் தேசிய வானொலியான ஆர். டி. எம். வானொலியின் 'மின்னல் எப். எம்.' நிகழ்ச்சியில் என்னுடைய நேர்காணல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த நேர்காணலை அறிவிப்பாளரும், தயாரிப்பாளருமான பொன். கோகிலம் மேற்கொண்டார். இந்த நேர்காணல் மே 22, 2011 ம் திகதி ஒலிபரப்பாகியது. இந்த நேர்காணலில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான அறிமுகமொன்றினை வழங்கக்கூடியதாக இருந்தது.

அறிமுக நிகழ்வு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வொன்று மே 22, 2011 மலேசியாவில் காலை 11 மணி முதல் 1.30 வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வல்லினம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்தை சேர்ந்த சில அன்பர்களும், செம்பருத்தி சஞ்சிகையின் ஆசிரியர் பீடத்தை சேர்ந்த சில அன்பர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த ஒன்று கூடலுக்கான ஏற்பாட்டினை வல்லினம் ஆசிரியர் ம. நவீன் ஏற்பாடு செய்திருந்தார்.

தலைமை[தொகு]

ஒன்று கூடல் நிகழ்வுக்கான தலைமையினை மலேசியாவிலிருந்து சமூகம், அரசியல், கலை, பண்பாடு என பல்சுவை அம்சங்களுடன் இருமாதங்களுக்கொருதடவை தமிழ் மொழிமூலம் வெளிவந்து கொண்டிருக்கும் செம்பருத்தி சஞ்சிகையின் ஆசிரியர் சு. யுவராஜன் ஏற்று நடத்தினார்.

நடைபெற்ற இடம்[தொகு]

  • செம்பருத்தி அலுவலகம், இல. 03 ஜலான் யப் அக்சேக், 50300 கோலாலம்பூர்.

பிரதம அழைப்பாளர்[தொகு]

இந்நிகழ்வுக்கு மலேசியாவில் மூத்த எழுத்தாளரும், விக்கிப்பீடிய பயனருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். இலங்கையிலிருந்து அவருடன் தொடர்பு கொண்ட நேரத்தில் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார். இருப்பினும் தொலைத் தொடர்புகளில் ஏற்பட்ட சில அசௌகரியங்களில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

விசேட அழைப்பாளர்[தொகு]

இந்நிகழ்வுக்கு மலேசியாவில் மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளரும், மலேசியாவில் முன்னணி தேசிய பத்திரிகைகளுள் ஒன்றான 'தமிழ் நேசன்' ஆசிரியர் பீட ஆலோசகருமான அக்கினி சுகுமார் அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்வு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக என்னால் பூரணமான விளக்கம் வழங்கப்பட்டது. விக்கிப்பீடியா தொடர்பான பல சந்தேகங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டன. விக்கிப்பீடியாப் பற்றி தெரிந்திருந்தாலும் கூட விக்கிப்பீடியாவில் இணைந்து பங்களிப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டி இருக்கவில்லை. இது குறித்தும் பூரண விளக்கம் வழங்கப்பட்டது. மலேசியாவில் தமிழ் இலக்கியம் பற்றியும் மலேசியாவின் கலை, கலாசார பாரம்பாரியங்கள் பற்றியும் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நிலையை அவர்கள் பூரணமாக ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்தும் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்ய சிலர் முழுமையான விருப்பத்தினை தெரிவித்தனர்.

தடையீடுகள்[தொகு]

பிரதான கணனியில் ஏற்பட்ட சில தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக நிகழ்ச்சிகளை தெளிவுபடுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இருப்பினும் மடிக்கணனியின் துணையுடன் ஓரளவுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் முதல் பயனர்[தொகு]

நிகழ்வின் முதல் பயனராக 'யோகி' இணைந்து கொண்டார். இவர் புதுப்பயனராக பதிவு செய்து ஒரு நிமிடத்துக்குள் சோடாபாட்டில் வரவேற்ற நிகழ்வு அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. விக்கிப்பீடியாவில் விசமிகளால் செய்யப்படும் திருத்தங்கள் உடனுக்குடன் கவனத்தில் கொள்ளப்படும் என்ற கருத்தினை அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் விக்கிப் பயனர்கள் சகல விடயங்களையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற கருத்தினை உறுதிப்படுத்தக்கூடியதாகவும் அமைந்தது. இந்த நிகழ்வு விக்கியின் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த அத்திவாராமாக அமைந்ததுடன் ஒன்று கூடலில் பங்கேற்றவர்கள் பயனர்களாக இணையக்கூடிய சூழ்நிலையும் உருவாகியது. அத்துடன் தொடர்ந்தும் பயனுள்ள கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டது மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

தொடர் திட்டங்கள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவை மலேசியா தமிழ் ஊடகங்களில் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மலேசியா தேசியப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் இத்தகைய அறிமுகங்கள் இடம்பெறும் போது அவை பற்றி அறியத்தரப்படும். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலேசிய ஊடகத் துறையினர் என்பது மலேசியத் தமிழ்ச் சமூகத்துக்கு விக்கியினை எடுத்துச் செல்வதற்கு உறுதுணையாக அமையும்.

எதிர்காலத் திட்டம்[தொகு]

எமது முதல் அறிமுகத்தின் வெளிப்பாட்டினை கருத்திற்கொண்டு விரைவில் விக்கிப் பயிற்சிப் பட்டறையொன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.