விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2025
- மார்ச்சு
ஈழப்போரில் கிழக்குப் போர்முனை என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு திருக்கோணமலை மாவட்டத்தில் நெல்வயல்களுக்கான நீர் விநியோகத்தை புலிகள் துண்டித்ததைக் காரணமாக கொண்டு 2006, யூலை, 21 அன்று மோதலாக துவங்கியது. ஏறக்குறைய ஓராண்டு சண்டைக்குப் பிறகு, 2007, யூலை, 11 குடும்பிமலையை (பரோனின் தொப்பி) கைப்பற்றிய பின்னர் கிழக்கு மாகாணத்தின் முழு கட்டுப்பாடும் தங்கள் வசம் வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. இச்சமயத்தில் சம்பூர், வாகரை, கஞ்சிகுடிச்சாறு, கொக்கடிச்சுளாய், குடும்பிமலை ஆகிய இடங்களில் பெரும் போர்கள் நடந்தன. இராணுவம் மற்றும் பொதுமக்கள் இறப்புகள் இருபுறமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. மேலும்...
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது அமெரிக்கா என்பது முதன்மையாக வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும் மற்றும் ஒன்பது சிறிய வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. நிலப்பரப்பளவு மற்றும் மொத்தப் பரப்பளவு ஆகிய இரு அளவுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவானது உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. மேலும்...
- ஏப்ரல்
கேரளம் என்பது இந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி 1956 நவம்பர் 1 அன்று இது உருவாக்கப்பட்டது. கொச்சி, மலபார், தென் கன்னட மாவட்டம் மற்றும் திருவாங்கூரின் அப்போதைய பகுதிகளின் மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது. 38,863 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன், 21-ஆவது மிகப் பெரிய இந்திய மாநிலமாக கேரளம் உள்ளது. இதற்கு வடக்கு, வடகிழக்கே கருநாடகமும், கிழக்கு, தெற்கே தமிழ்நாடும், மேற்கே இலட்சத்தீவுக் கடலும் எல்லைகளாக உள்ளன. மேலும்...
டேனியக் கோட்டை என்பது தமிழ்நாட்டின் தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க் நாட்டவர்களின் கோட்டையாகும். இக்கோட்டை தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டென்மார்க்கு அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு பொ.ஊ. 1620 இல் கட்டப்பட்டது. இந்தக் கோட்டையே டென்மார்க்கர்களின் கோட்டைகளில் இரண்டாவது பெரிய கோட்டையாகும். இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845 ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு இந்த ஊரும் இக்கோட்டையும் தம் சிறப்பை இழந்தன. இந்தியா விடுதலையான 1947-க்குப் பின்னர் 1978 வரை இக்கோட்டை தமிழ்நாட்டு அரசால் ஆய்வு மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. மேலும்...
இந்தித் திணிப்பு என்பது மொழி மேலாதிக்கத்தின் ஒரு வடிவமாகும். இதில் இந்தியைப் பிராந்திய மொழியாகக் கொண்டிராத அல்லது பயன்படுத்த விரும்பாத இந்திய மாநிலங்களில் இந்தியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இந்தச் சொல் தமிழ்நாட்டின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் வேரூன்றியது. மதராஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டபோது அது ஒரு சிக்கலாக மாறியது. மேலும்...
உருசியா என்பது கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆசியாவில் பரவியிருக்கும் ஒரு நாடு ஆகும். பரப்பளவில் உலகின் மிகப் பெரிய நாடு இது தான். இது 11 நேர வலயங்களுக்கு விரிவடைந்தும், 14 நாடுகளுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டும் உள்ளது. உலகின் ஒன்பதாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நாடும், ஐரோப்பாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடும் இதுவாகும். உருசியா அதிக அளவு நகரமயமாக்கப்பட்ட ஒரு நாடாகும். 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட 16 மக்கள் தொகை மையங்களை இது உள்ளடக்கியுள்ளது. மாஸ்கோ இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும். சென் பீட்டர்சுபெர்கு உருசியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமும், இதன் பண்பாட்டுத் தலைநகரமும் ஆகும். மேலும்...
குப்தப் பேரரசு என்பது ஒரு பண்டைக் கால இந்தியப் பேரரசு ஆகும். இது அதன் உச்சபட்ச நிலையின் போது, தோராயமாக பொ.ஊ. 319 முதல் 467 வரை, பெரும்பாலான இந்தியத் துணைக்கண்டத்தை உள்ளடக்கியிருந்தது. பிற வரலாற்றாளர்கள் இதன் பின்னர் வரும் இயல்பாக்கத்தை விவாதத்திற்கு உள்ளாக்குகின்ற போதிலும், சில வரலாற்றாளர்களால் இக்காலமானது இந்தியாவின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. பேரரசின் ஆட்சி புரிந்த அரசமரபானது குப்தரால் நிறுவப்பட்டது. அரசமரபின் மிகுந்த குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களாக முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆகியோர் திகழ்ந்தனர். மேலும்...
சுபான்சூ சுக்லா இந்திய விமானப்படையின் பரிசோதனை விமானியாவார். மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவர். அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயணச் சேவைகள் நிறுவனமான ஆக்சிம் விண்வெளி நிறுவனத்தின் ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் 2025 மே மாதத்தில் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குப் பயணம் செய்ய உள்ளார். மேலும்...
- மே
சீனா கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரபூர்வமாக சீன மக்கள் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தியாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இதுவாகும். ஐந்து நேர வலயங்களுக்குச் சமமாக சீனா விரிவடைந்துள்ளது. 14 நாடுகளுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 96 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுடன் மொத்த நிலப்பரப்பளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடு இதுவாகும். இந்நாடானது 33 மாகாண நிலைப் பிரிவுகள், 22 மாகாணங்கள், ஐந்து சுயாட்சிப் பகுதிகள், நான்கு மாநகராட்சிகள் மற்றும் இரண்டு பகுதியளவு சுயாட்சியுடைய சிறப்பு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெய்சிங் இந்நாட்டின் தலைநகரம் ஆகும். மேலும்...
சர்வோதயக் கல்வி என்பது அறிவும் உழைப்பும் தனித்தனியானவை அல்ல என்பதைக் கூறும் ஒரு கொள்கையாகும். இந்தக் கல்வியியல் கொள்கையின் அடிப்படையில் அதே பெயரில் ஒரு கல்விப் பாடத்திட்டத்தை மகாத்மா காந்தி ஊக்குவித்தார். இந்தச் சொற்றொடர் 'அனைவருக்கும் அடிப்படைக் கல்வி' என மொழிபெயர்க்கப்படுகிறது. இது ஆங்கிலக் கல்வி முறை, காலனித்துவத்துடன் காந்திக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. காந்தியக் கல்வி முறையானது குழந்தைகள் தங்கள் கைவண்ணத்தையும் கற்பனைத் திறனையும் காட்டும் தொழில் பட்டறைகளை அறிமுகம் செய்யும் கல்வியாக இருந்தது. மேலும்...
சிங்கப்பூர் என்பது தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடும் நகர அரசும் ஆகும். சிங்கப்பூர் அதன் தொடக்க கால வரலாற்றில் துமாசிக் என்று அறியப்பட்டது. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூர் ஒரு கடல்சார் வணிக மையமாகத் திகழ்ந்தது. இதன் சமகால வரலாறு 1819 இல் தொடங்குகிறது. இசுடாம்போர்டு இராஃபிள்சு பிரித்தானியப் பேரரசிற்குச் சொந்தமாக ஒரு வணிகப் பணியிடமாகச் சிங்கப்பூரை நிறுவினார். 1867-இல் சிங்கப்பூர், நீரிணைக் குடியேற்றங்களின் ஒரு பகுதியாக, பிரித்தானியாவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1959-இல் சிங்கப்பூர் சுயாட்சி பெற்றது. 1963-இல் மலாயா, வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவின் ஒரு புதிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக உருவானது. 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஒரு சுதந்திரமான இறையாண்மையுள்ள நாடாக உருவானது. மேலும்...
குத்புத்தீன் ஐபக் என்பவர் கோரி சுல்தான் முகம்மது கோரியின் ஒரு தளபதி ஆவார். 1206-இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு இவர் தில்லி சுல்தானகத்தை (1206–1526) நிறுவி, மம்லூக் அரசமரபைத் தொடங்கினார். இது சுல்தானகத்தை 1290 வரை ஆண்டது. தில்லியில் குதுப் மினாரைக் கட்டும் பணியைத் தொடங்கி வைத்ததற்காக ஐபக் அறியப்படுகிறார். 1192-இல் இரண்டாம் தரைன் போரில் கோரி வெற்றிக்குப் பிறகு இந்திய நிலப்பரப்புக்கு பொறுப்பாளராக ஐபக்கை முகம்மது கோரி நியமித்தார். முகம்மது கோரியின் இறப்பிற்குப் பிறகு வடமேற்கு இந்தியாவில் கோரி நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டுக்காக மற்றொரு முன்னாள் அடிமை தளபதியான தாசல்தீன் இல்திசுவுடன் ஐபக் சண்டையிட்டு, தன்னுடைய தலைநகரை லாகூரில் அமைத்தார். முகம்மது கோரிக்கு பின் பதவிக்கு வந்த கியாசுதீன் மகுமூது, இந்தியாவின் ஆட்சியாளராக ஐபக்கை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார். மேலும்...
இந்தியா என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். உலகில் பரப்பளவு அடிப்படையில் ஏழாவது மிகப் பெரிய நாடும், மக்கள் தொகையின் அடிப்படையில் முதலாமிடத்தைக் கொண்ட நாடும் இதுவாகும். இதற்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலும், தென் மேற்கே அரபிக்கடலும், தென் கிழக்கே வங்காள விரிகுடாவும் சூழ்ந்துள்ளன. இந்தியாவின் மேற்கே பாக்கித்தான், வடக்கே சீனா, நேபாளம் மற்றும் பூட்டான், கிழக்கே வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் நில எல்லைகளைப் பகிர்கின்றன. இந்தியப் பெருங்கடலில் இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு அருகில் இந்தியா அமைந்துள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளானவை தாய்லாந்து, மியான்மர் மற்றும் இந்தோனேசியாவுடன் ஒரு கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.மேலும்...
பாண்டிய நாட்டின் மீது மாலிக் கபூரின் படையெடுப்பு - 1310-1311 காலப்பகுதியில், தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி தன் தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர் தலைமையிலான படைகளை இந்திய துணைக்கண்டத்தின் தெற்கே உள்ள நாடுகளைக் கைப்பற்ற அனுப்பினார். போசளர்களை அடிமைப்படுத்திய பின்னர், மாலிக் கபூர் இன்றைய தமிழ்நாட்டின் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். இதற்கு பாண்டிய சகோதரர்களான வீரபாண்டியனுக்கும், சுந்தரபாண்டியனுக்கும் இடையிலான அரசுரிமைப் போரைப் பயன்படுத்திக் கொண்டார். 1311 மார்ச்-ஏப்ரல் காலக்கட்டத்தில், பாண்டிய நாட்டில் அவர்களின் தலைநகர் மதுரை உட்பட பல இடங்களில் திடீர்த்தாக்குதல் நடத்தினார். தில்லி சுல்தானகத்துக்கு அடங்கிய ஆட்சியாளராக பாண்டிய மன்னரை அவரால் மாற்ற முடியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து யானைகள், குதிரைகள், தங்கம், விலைமதிப்பற்ற கற்கள் உட்பட பெரிய கொள்ளை பொருட்களைப் பெற்றார். மேலும்...
மௌரியப் பேரரசு என்பது மகதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்தில் விரிவடைந்திருந்த ஒரு வரலாற்றுச் சக்தியாகும். இது பொ.ஊ.மு. 322-இல் சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்டு, பொ.ஊ.மு. 185 வரை நீடித்திருந்தது. சிந்து-கங்கைச் சமவெளியை வென்றதன் மூலம் மௌரியப் பேரரசானது மையப்படுத்தப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரத்தில் அமைந்திருந்தது. அசோகரின் ஆட்சியின் போது பேரரசானது குறுகிய காலத்திற்கு இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய நகர மையங்களையும் நெடுஞ்சாலைக் குடியிருப்புகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொலைதூரத் தென்னிந்தியாவில் இருந்த பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. அசோகரின் ஆட்சிக் காலம் முடிந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்து இது வீழ்ச்சியடையத் தொடங்கியது. பிரகத்ரதரைப் புஷ்யமித்திர சுங்கன் அரசியல் கொலை செய்து மகதத்தில் சுங்கப் பேரரசை நிறுவியதற்குப் பிறகு பொ.ஊ.மு. 185இல் இப்பேரரசு கலைக்கப்பட்டது. மேலும்...
கையசு சூலியசு சீசர் (100 பொ.ஊ.மு.–44 பொ.ஊ.மு.) என்பவர் ஓர் உரோமானியத் தளபதியும் அரசியல் மேதையும் ஆவார். இவர் கௌல் போர்களில் உரோமானிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு தன் அரசியல் எதிரி பாம்பேயை ஓர் உள்நாட்டுப் போரில் தோற்கடித்தார். இறுதியாக பொ.ஊ.மு. 49-இல் சர்வாதிகாரியானார். பொ. ஊ. மு. 44-இல் அரசியல் கொலை செய்யப்படும் வரை இப்பதவியில் தொடர்ந்தார். உரோமைக் குடியரசின் வீழ்ச்சியிலும் உரோமைப் பேரரசின் வளர்ச்சிக்கும் வழி வகுத்த நிகழ்வுகளில் முக்கிய பங்கை ஆற்றினார். தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளை கௌல் போர்களில் பெற்றதன் வழியாக உரோமைக் குடியரசில் மிகுந்த சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக சீசர் வளர்ந்தார். மேலும்...
- சூன்
கௌதம புத்தர் என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும் வழி காட்டல்களையும் துறவிமட விதிகளையுமே பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது. பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டு வந்த இத்தகவல்கள், நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திரிபிடகம் என்கிற நூலாக எழுத்துவடிவம் பெற்றது. மேலும்...
சவூதி அரேபியா மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இது மத்திய கிழக்கின் நடுவில் அமைந்துள்ளது. அரபுத் தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளை இது ஆக்கிரமித்துள்ளது. சுமார் 21.50 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்நாடு, உலகின் பன்னிரெண்டாவது மிகப் பெரிய நாடு ஆகும். இந்நாட்டின் நிலப்பரப்பில் பெரும்பாலான பகுதி வறண்ட பாலைவனம், தாழ்நிலப் பகுதி, புல்வெளி மற்றும் மலைகளைக் கொண்டுள்ளது. செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா ஆகிய இரு கடல்களின் கடற்கரையையும் கொண்ட ஒரே நாடு சவூதி அரேபியா தான். இந்நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் ரியாத் ஆகும். ஜித்தா, மக்கா, மதீனா முதலியன பிற முக்கியமான நகரங்கள் ஆகும். இந்நாட்டின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 3.22 கோடி. அரபுலகில் சவூதி அரேபியா நான்காவது மிக அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும்...
திருக்குறள், ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் புற வாழ்விலும் நலமுடன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன மேலும்...
அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு (கி.மு. 387) என்பது பாரசீக மன்னர் இரண்டாம் அர்தசெராக்சால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அமைதி உடன்பாடாகும். இது பண்டைய கிரேக்கத்தில் கொரிந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்த ஒப்பந்தம் பழங்காலத்தில் மிகவும் பொதுவாக மன்னரின் அமைதி உடன்பாடு என்று அழைக்கப்பட்டது. இது பாரசீக செல்வாக்கின் ஆழத்தைக் காட்டுகிறது. ஏனெனில், பாரசீகர்கள் கொடுத்த தங்கமே முந்தைய போருக்கு உந்து விசையாக இருந்தது. முதல் பெலோபொன்னேசியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தத்தைப் போன்றே இந்த ஒப்பந்தமும் ஒரு பொது அமைதி ஒப்பந்தத்தின் ஒரு வடிவமாகும். மேலும்...
புலி என்பது பூனைக் குடும்பத்தில் உள்ளதிலேயே உருவத்தில் மிகப்பெரிய விலங்கினம் ஆகும். இது செம்மஞ்சள் நிற மேற்தோலுடன் கருப்புக் நிற கோடுகளுடன் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் போன்ற தாவர உண்ணிகளை வேட்டையாடுகின்றன. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் சமூக விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புலிகள் தங்கள் வாழ்விடத்தில் ஏறத்தாழ 93% அளவு வரை இழந்துவிட்டன. மேலும்...
சிந்துவெளி நாகரிகம் என்பது தெற்காசியாவின் வடமேற்கு பகுதிகளில் இருந்த ஒரு வெண்கலக் கால நாகரிகம் ஆகும். இது கிமு 3300 முதல் கிமு 1300 வரை நீடித்திருந்தது. பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா ஆகியவற்றுடன் அண்மைக் கிழக்கு மற்றும் தெற்காசியாவின் மூன்று தொடக்க கால நாகரிகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மூன்றில் இதுவே பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்தது. இந்நாகரிகத்தின் களங்கள் பெரும்பாலான பாக்கித்தான் முதல் வடகிழக்கு ஆப்கானித்தான், வடமேற்கு இந்தியா வரை பரவியிருந்தன. இந்நாகரிகம் சிந்து ஆற்றின் வண்டல் சமவெளியின் நெடுகில் அமைந்திருந்தது. சில நேரங்களில் சிந்து நாகரிகத்தை குறிக்க அரப்பா நாகரிகம் என்ற சொல்லானது பயன்படுத்தப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்திலேயே முதன் முதலில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மாதிரிக் களமான அரப்பாவிலிருந்து இது இப்பெயரைப் பெறுகிறது. மேலும்...
ஈரான் அல்லது பாரசீகம் மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வடமேற்கே துருக்கியும், மேற்கே ஈராக்கும், வடக்கே அசர்பைஜான், ஆர்மீனியா, காசுப்பியன் கடல், துருக்மெனிஸ்தான் ஆகியவையும், கிழக்கே ஆப்கானித்தானும், தென்கிழக்கே பாக்கித்தானும், தெற்கே ஓமான் குடா, பாரசீக வளைகுடாவும் எல்லைகளாக உள்ளன. இதன் கிட்டத்தட்ட ஒன்பது கோடி மக்களில் பெரும்பாலானோர் பாரசீக இனத்தவராவர். மொத்த பரப்பளவு, மக்கள் தொகை அடிப்படையில் உலக அளவில் 17ஆவது இடத்தைப் பெறுகிறது. உலகில் மிகுந்த மலைப் பாங்கான நாடுகளில் இதுவும் ஒன்று. ஓர் இசுலாமியக் குடியரசான ஈரானில், பெரும்பான்மையாக முசுலிம் மக்கள் வாழ்கின்றனர். ஒரு நாகரிகத் தொட்டிலாக ஈரானில் தொடக்க காலக் கற்காலத்தின் பிந்தைய பகுதியிலிருந்தே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும்...
பூமருது என்பது தெற்காசிய வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதன் மலர்கள் கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்கும். இது ஒளிரும் இளஞ்சிவப்பு முதல் வெளிர் ஊதா நிற பூக்களைக் கொண்ட ஒரு இலையுதிர் மரமாகும். இதன் இலைகள் குளிர் காலத்தில் உதிரும் முன்னே சிவப்பாக மாறிவிடும். இதன் மரம் வலிமையில் தேக்கு மரத்திற்கு அடுத்ததாக உள்ளது. பூமருது வயலும் வயல் சார்ந்த நிலமான மருதத் திணைக்குரிய மரம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சங்கப் பாடல்களில் வருணிக்கப்படும் மருதப் பூ பற்றிய குறிப்புகள் செம்மருதுப் பூவுக்கே பொருந்துவதாகக் கூறுகின்றனர். இதனை முடக்காஞ்சிச் செம்மருதின் (வரி 189) என்ற பொருநராற்றுப்படையும், செவ்வி மருதின் செம்மலோடு தாஅய் (50-2) என்ற குறுந்தொகை வரியும் உறுதிப்படுத்துகின்றன. இந்தத் தாவரம் கொண்ட அஞ்சல் தலையை இந்தியா வெளியிட்டுள்ளது. மேலும்...
பாக்கித்தான் என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாடு 24.15 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய ஐந்தாவது நாடாகத் திகழ்கிறது. 2023-ஆம் ஆண்டின் கணக்குப்படி, உலகின் இரண்டாவது மிகப் பெரிய முசுலிம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகரம் இசுலாமாபாத் ஆகும். அதே வேளை, கராச்சியானது இந்நாட்டின் மிகப் பெரிய நகரமாகவும் நிதி மையமாகவும் திகழ்கிறது. பரப்பளவின் அடிப்படையில் உலகிலேயே 33-ஆவது மிகப் பெரிய நாடு. இந்நாடானது தெற்கே அரபிக்கடல், தென்மேற்கே ஓமான் குடா தென்கிழக்கே சர் கிரிக் நீர் எல்லைக் கோடு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. கிழக்கே இந்தியா, மேற்கே ஆப்கானித்தான், தென்மேற்கே ஈரான் மற்றும் வடகிழக்கே சீனாவுடன் இது நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்நாடானது ஆப்கானித்தானின் குறுகிய வக்கான் தாழ்வாரத்தால் வடமேற்குப் பகுதியில் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. மேலும்...
- சூலை
இந்திய வரலாறு என்பது நவீன மனிதர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குக் குறைந்தது 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் வந்ததில் இருந்து தொடங்குகிறது. தெற்காசியாவில் நிலையான வாழ்க்கையை வாழும் முறையானது பொ. ஊ. மு. 7,000-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது.இது படிப்படியாக சிந்துவெளி நாகரிகமாகப்பரிணாமம் அடைந்தது. அன்றைய மூன்று தொடக்கால நாகரிகத் தொட்டில்களில் இதுவும் ஒன்றாகும். பொ. ஊ. மு. இரண்டாம் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் தொடர்ச்சியான வறட்சியானது சிந்துவெளி மக்கள் பெரிய நகர மையங்களிலிருந்து சிறிய கிராமங்களாகச் சிதறுவதற்குக் காரணமானது. பொ. ஊ. மு. 600 வாக்கில் ஒரு புதிய, பகுதிகளுக்கு இடையிலான பண்பாடானது உருவானது. பிறகு தலைவர்களால் ஆளப்பட்ட சிறிய அரசுகள் பெரிய அரசுகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. இரண்டாவது நகரமயமாக்கலானது நடைபெற்றது. புதிய துறவு இயக்கங்கள் மற்றும் சமயக் கருத்துருக்களின் வளர்ச்சியுடன் இது நடைபெற்றது. இதில் சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியும் அடங்கும். பௌத்தமானது துணைக் கண்டத்தின் ஏற்கெனவே இருந்த சமயப் பண்பாடுகளுடன் கலந்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்குக் காரணமானது. மேலும்...
துக்ளக் அரசமரபு என்பது நடுக் கால இந்தியாவில் தில்லி சுல்தானகத்தை ஆண்ட மூன்றாவது அரசமரபு ஆகும். தில்லியில் இந்த அரசமரபின் ஆட்சிக் காலமானது 1320-ஆம் ஆண்டு, கியாதல்தீன் துக்ளக் என்ற பட்டத்துடன் காசி மாலிக் அரியணைக்கு ஏறிய போது தொடங்கியது. இந்த அரசமரபானது 1413-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. முகம்மது பின் துக்ளக்கால் தலைமை தாங்கப்பட்ட ஓர் இராணுவ படையெடுப்பின் மூலமாக இந்த அரசமரபு அதன் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொண்டது. 1330, 1335 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது அதன் உச்சபட்ச பரப்பளவை அடைந்தது. இந்தக் குறுகிய காலத்திற்கு பெரும்பாலான இந்திய துணைக்கண்டத்தை இது ஆண்டது. மேலும்...
பாரம்பரிய ஏதென்ஸ் நகரம் பண்டைய கிரேக்கத்தின் பாரம்பரிய காலத்தில் (கிமு 480–323) குறிப்பிடத்தக்க முக்கிய நகர அரசாக இருந்தது. இது கிரேக்கத்தின் அட்டிகாவில் அமைந்துள்ளது. எசுபார்த்தா மற்றும் பெலோபொன்னேசியன் கூட்டணிக்கு எதிரான பெலோபொன்னேசியன் போரில் இது டெலியன் கூட்டணியை வழிநடத்தியது. ஏதெனிய சனநாயகமானது கிமு 508 இல் இசகோரசின் சர்வாதிகார ஆட்சியைத் தொடர்ந்து கிளீசுத்தனீசுவின் கீழ் நிறுவப்பட்டது. இந்த அரசு அமைப்பு குறிப்பிடத்தக்க வகையில் நிலையானதாக இருந்தது. ஏதெனிய சனநாயகமானது சில காலம் தடைகளுக்கு ஆளாகினாலும் கிமு 322 வரை ( லாமியன் போருக்குப் பிறகு) 180 ஆண்டுகளாக நீடித்தது. ஏதெனிய மேலாதிக்கத்தின் உச்ச வளர்ச்சியானது கிமு 440 முதல் 430 வரை எட்டப்பட்டது. இது பெரிக்கிளீசு காலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும்...
- ஆகத்து
வெப்பாலை (Wrightia tinctoria) என்பது ஒரு பூக்கும் தாவரமாகும். ரைட்டியா என்ற பேரினத்தைச் சேர்ந்த இந்த மரமானது இந்தியா, தெற்காசியா, ஆத்திரேலியா முதலிய நாடுகளில் வறண்ட மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. இது பழந்தமிழகத்தில் பாலை மரம் என அழைக்கப்பட்டது. ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது இம்மரமே. கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். யானை தன் தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டைகளைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். எனவே இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு. இத்தாவரத்தின் பல்வேறு பகுதிகள் மரபார்ந்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாகவோ பாதுகாப்பானதாகவோ இருப்பதற்கான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. மேலும்...
உலகின் மிகப் பழமையான தொடர்ந்து நீடித்திருக்கும் முதன்மையான நாகரிகங்களில் ஒன்றுக்குத் தாயகமாக ஈரான் உள்ளது. தன்னுடைய உலக வரலாற்றின் தத்துவம் குறித்த விரிவுரைகள் என்ற நூலில் செருமானிய தத்துவவாதி எகல் பாரசீகர்களை "முதல் வரலாற்று வாய்மையுடைய மக்கள்" என்று அழைக்கிறார். ஈரானின் வரலாறானது பெரிய ஈரான் என்று அழைக்கப்படும் பகுதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பெரிய ஈரான் என்பது பாரசீகர்களால் குறிப்பிடத்தக்க அளவு குடியமர்வு கண்ட அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு சமூக-பண்பாட்டுப் பகுதியாகும். இப்பகுதிக்கு மையமாக ஈரானியப் பீடபூமி உள்ளது. ஈரானிய வரலாற்றின் மிக கவனிக்கத் தக்க தாக்கமானது மேற்கே அனத்தோலியாவில் இருந்து, கிழக்கே சிந்துவெளி வரை விரிவடைந்துள்ளதைக் காண முடியும். இந்தியா, சீனா, கிரேக்கம், உரோம், எகிப்து போன்ற பல பிற முதன்மையான நாகரிகங்களின் வரலாற்றுடன் இந்நாட்டின் வரலாறு வேறுபட்ட அளவுகளில் பிணைந்துள்ளது. மேலும்...
மெசொப்பொதாமியா, பண்டைய தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு நிலப்பகுதியாகும். இது டைகிரிசு , யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியாகும். இது இன்றைய ஈராக், சிரியா மற்றும் வடமேற்கு ஈரான், துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பண்டைய நாகரிகங்களான சுமேரிய நாகரிகம், அக்காதிய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம் மற்றும் சாலடிய நாகரிகம் போன்று நாகரிகம் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவில் சுமேரியர்கள் அறிமுகப்படுத்திய ஆப்பெழுத்து எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று. மேலும்...
முருகன் என்பவர் இந்துக் கடவுளர்களான சிவன்–பார்வதியின் மகனாவார். முருகன் இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கியத் தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே என்பதால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும், பழனி மலையில் வசிக்கும் ஆண்டவராகப் போற்றப்படுகிறார். சங்க காலத்தில் குறிஞ்சி நிலப்பகுதியின் தெய்வமாகப் போற்றப்பட்டார். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கௌமாரம் முருகன் வழிபாட்டினைச் குறிக்கும். தென்னிந்திய முறைப்படி, இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார். முருகனுக்குத் தெய்வானை, வள்ளி இருவரும் மனைவிகளாவர். மேலும்...
குப்லாய் கான் (1215 – 1294) என்பவர் 1271-இல் சீனாவின் யுவான் அரசமரபை தோற்றுவித்தவர். 1260 முதல் 1294 வரை மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது ககான்-பேரரசராகவும் இவர் திகழ்ந்தார். 1294–இல் இவரது இறப்பு வரை யுவான் அரசமரபை ஆண்டார். இவர் செங்கிஸ்கானின் ஒரு பேரன் ஆவார். ககானாக ஈல்கானரசில் இவர் தொடர்ந்து செல்வாக்கு கொண்டிருந்த போதிலும் கூட, குப்லாயின் உண்மையான அதிகாரம் யுவான் பேரரசுக்குள் தான் அடங்கியிருந்தது. ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைவான அளவில் தங்க நாடோடிக் கூட்டம் மீதும் இவர் செல்வாக்கு பெற்றிருந்தார். அந்நேரத்தில் மங்கோலியப் பேரரசை ஒட்டு மொத்தமாக ஒருவர் கருதினால் இவரது நாடானது அமைதிப் பெருங்கடல் முதல் கருங்கடல் வரையிலும், சைபீரியா முதல் தற்போதைய ஆப்கானித்தான் வரையிலும் விரிவடைந்திருந்தது. யுவான் அரசமரபானது தற்போதய சீனா, மங்கோலியா, கொரியா, தெற்கு சைபீரியா மற்றும் அதன் அண்டைப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் மீது ஆட்சி நடத்தியது. ககானாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலும் இவர் செல்வாக்கு பெற்றிருந்தார். மேலும்...
- செப்டெம்பர்
சுப்பிரமணிய பாரதி கவிஞரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது தேசபக்தியைத் தூண்டும் பாடல்களை இயற்றினார். பெண் விடுதலைக்காகவும், சாதி மறுப்பு, குழந்தைத் திருமணத்திற்கு எதிராகவும் போராடினார். 1882–இல் திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி, தனது ஆரம்பக் கல்வியை திருநெல்வேலி, வாரணாசி ஆகிய இடங்களில் பயின்றார். இவர் சுதேசமித்திரன், தி இந்து, பால பாரதா, விஜயா, சக்ரவர்த்தினி, இந்தியா உள்ளிட்ட பல இதழ்களிலும், செய்தித்தாள்களிலும் எழுதி வந்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். 1908–ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் பாரதியைக் கைது செய்ய ஆணை பிறப்பித்ததால், இவர் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் இருந்த பாண்டிச்சேரியில் 1918 வரை ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் நாளும் உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்ட பிறகு உடல் நலம் குன்றிய இவர், சில மாதங்களுக்குப் பிறகு 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை இறந்தார். மேலும்...
சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனைக் 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. "சிலப்பதிகாரம்" என்ற சொல் சிலம்பு, அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. மேலும்...
முதலாம் தியோனீசியசு (அண். கி.மு. 432–367 ) என்பவர் பண்டைய கிரேக்க சர்வாதிகாரி ஆவார். இவர் சிசிலியில் உள்ள சிரக்கூசாவின் ஆட்சியாளராக இருந்தார். மேற்குக் கிரேக்கக் குடியேற்றங்களில் சிரக்கூசா நகர அரசை மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகச் சிசிலியிலிருந்து இத்தாலி வரை பரவிய பேரரசாக மாற்றினார். இந்தப் பேரரசு பெயரளவில் ஓர் அரசியலமைப்புள்ள குடியரசாக இருந்தாலும், உண்மையில் இது முடியாட்சியாக இருந்த முதல் கிரேக்கப் பேரரசாகும். இதில் தியோனீசியஸ் பேரரசர் அலெக்சாந்தருக்கும் அகஸ்டசின் சாதனைகளுக்கும் முன்மாதிரியாக இருந்தார். இவர் தனது வாழ்நாளில் தெய்வீக மரியாதைகளைப் பெற்ற முதல் கிரேக்க ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்து பிற்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருந்தார். இவர் மிக மோசமான, கொடூரமான, பழிவாங்கும் சர்வாதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பழங்காலத்தில் கருதப்பட்டார். மேலும்...






























