விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 6, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை முற்றுகை என்பது பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த சென்னையை தங்கள் கட்டுபாட்டுக்கு கொண்டுவர பிரெஞ்சு படைகள் டிசம்பர் 1758 முதல் பெப்ரவரி 1759 வரை, லல்லி தலைமையில் நடத்திய முற்றுகைப் போராகும். இது ஏழு ஆண்டுப் போரின் போது நடந்த போராகும். பிரித்தானியப் படைகள் வெற்றிகரமாக இந்த முற்றுகையை எதிர்கொண்டனர். இந்தப் போரில் சென்னை நகரைப் பாதுகாக்க பிரித்தானியப் படையினர் 26,554 பீரங்கிக் குண்டுகளையும் 200,000 தோட்டாக்களையும் பயன்படுத்தினர். சென்னைப் பட்டினத்தைக் கைப்பற்றத் தவறியமை பிரெஞ்சுப் படையின் இந்திய நுழைவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்ததுடன் பின்னாளில் நடைபெற்ற வந்தவாசிப் போருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும்...


தலாய் லாமா என்பது மஞ்சள் தொப்பி என்னும் திபெத்திய புத்த மதப்பிரிவின் தலைமை லாமாவின் பதவியைக் குறிக்கும் பெயராகும். இது தலாய் (கடல்) என்ற மங்கோலிய சொல்லும், லாமா (குரு) என்ற திபெத்திய சொல்லும் இணைந்த கூட்டாகும். தலாய் லாமாக்கள் ஆன்மிகத் தலைவர்கள் ஆவர். மத நம்பிக்கையின் படி தலாய் லாமா என்பவர் அவலோகிதரின் அவதார வரிசையில் வருபவர் எனக் கருதப்படுகிறார். ஒரு தலாய் லாமா இறந்ததும், திபெத்தில் அதே நிமிடம் பிறந்த குழந்தை அடுத்த தலாய் லாமாவாகத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதாவது, இறந்த தலாய் லாமா மறு பிறப்பு எடுப்பதாக திபெத்தியர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஐந்தாவது தலாய் லாமா திபெத் மீது அரசியல் அதிகாரத்தைச் செலுத்தினார். அப்போது தொடங்கி தலாய் லாமாக்கள் ஆன்மிகத்தில் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார்கள். 17ம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை அவர்கள் பலமுறை திபெத்திய அரசாங்கத்தை வழிநடத்தியுள்ளார்கள். மேலும்...