விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 17, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரயான்-1 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. பின்னர், விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருந்தது. இப்பணித்திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.


கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன.யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது. இன்னொரு நூலான வைபவமாலை இவ்வரசு கிறித்து பிறந்தபின்னர் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன என்பது அவர்களது கருத்து.யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்தவையென சிங்கைநகர், நல்லூர் என இரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் இறுதிக்காலத்தில் தலைநகராயிருந்ததென்பதில் ஐயமெதுவும் இல்லை. சிங்கைநகரென்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வல்லிபுரப்பகுதியில் அமைந்திருந்ததென்றும், இவ்வரசின் ஆரம்பகாலத் தலைநகரம் இதுவேயென்றும் சிலர் கூற, சிங்கைநகரென்பதும் நல்லூரையே குறிக்குமென்றும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரம் நல்லூர் மட்டுமேயென்றும் வேறு சிலர் கொள்வர்.