விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 22, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ நாராயணகுரு இந்து ஆன்மிகவாதியும் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். சாதிக் கொடுமைகளால் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு 1855 ஆம் ஆண்டில் ஆகஸ்ட்மாதம் 28ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழந்தி எனும் கிராமத்தில் ஈழவ சமுதாயத்தில் விவசாயம் செய்து வந்த மாடன் ஆசான் - குட்டி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். நம்பூதிரிகளைத் தவிர பிறர் கோவில்களின் கருவறைக்குள் நுழைய முடியாத நிலையில் நாராயண குரு பல கோவில்களைக் கட்டி ஆலயப் பிரவேசத்திற்கு புதிய வழி முறையைக் கொண்டு வந்தார். கேரளாவில் திருச்சூர், கண்ணூர், அஞ்சுதெங்கு, கோழிக்கோடு போன்ற இடங்களில் கோவில்களைக் கட்டினார்.


திண்மம் என்பது இயற்பியலில்பொருள்களின் இயல்பான நான்குநிலைகளில் ஒன்றாகும். திண்மப்பொருள் என்பது திடப்பொருள் என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. சூழலின் வெப்பநிலையில் அணுக்கள் அதிர்ந்து கொண்டு இருந்தாலும், அணுக்கள் தங்களுக்கிடையே இருக்கும் தொடர்புகள் மாறுவதில்லை. ஒரு திண்மத்தில் உள்ள அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவும் ஏறத்தாழ அணுவின் விட்டத்திற்கு ஒப்பிடக்கூடியதாக (ஒப்பருகாக) இருக்கும்.ஒரு திண்மத்தில் உள்ள அணுக்கள் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து திண்மங்கள் படிகம், பல்படிகத் திண்மம்,சீருறாத் திண்மம் என பலவாறு பகுக்கப்படுகின்றன.