விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 22, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci, ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.


ஊதாரி மைந்தன் உவமை அல்லது கெட்ட குமாரன் உவமை, இயேசு கூறிய ஒரு உவமையாகும். இயேசு போதித்துக் கொண்டிருக்கும் போது, அன்றைய சமூகத்தால் ஒதுக்கப்பட்ட ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது தங்களை நீதிமான்களாக எண்ணிக்கொண்ட பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து, இவர்(இயேசு) பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு உவமைகளால் பேசத் தொடங்கினார். காணாமல் போன ஆடு, காணாமல் போன காசு உவமைகளை தொடர்ந்து இவ்வுவமையை இயேசு கூறினார். இது லூக்கா 15:11-32 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.