விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 17, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள் இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன. இவ்வாறே தமிழர் வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.


கே. எஸ். பாலச்சந்திரன் (பிறப்பு - கரவெட்டி, யாழ்ப்பாணம்) ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர். புலம் பெயர்ந்து தற்போது கனடாவில் வசித்து வருகிறார். ஏறக்குறைய 20 ஆண்டுளாக இலங்கை வானொலியின் தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இவரது அண்ணை றைற் தனி நடிப்பு நாடகம் புகழ் பெற்றது.