விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 18, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் வாள்முனை ஆள்கூற்று முறைமை என்பது ஒரு சமதளத்தில் அமைந்துள்ள எப்புள்ளியையும் முறையாகக் குறிப்பிடும் ஒரு முறைமை ஆகும். இம்முறையில் சமதளத்தில் உள்ள எந்தவொரு புள்ளியும் ஒரு நீளம், ஒரு கோணம் ஆகிய இரண்டு ஆள்கூறுகளால் குறிக்கப்பெறுகின்றது. இம்முறையில் நிலையான ஒரு தொடக்கப்புள்ளி உண்டு. சமதளத்தில் உள்ள எப்புள்ளியும் இந்தத் தொடக்கப்புள்ளியில் இருந்து எவ்வளவு தொலைவு உள்ளது என்று கூறும் நீளம் ஓர் ஆள்கூறு. அந்த நீளத்தை உடைய கோலை அல்லது வாளை, கிடை அச்சில் இருந்து இடஞ்சுழியாகச் சுழற்றி சமதளத்தில் உள்ள அப்புள்ளியை முனை தொடுமாறு இருந்தால் என்ன கோணம் உள்ளதோ, அது மற்றொரு ஆள்கூறு ஆகும். மேலும்...


ஆனந்த ரங்கம் பிள்ளை, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். 18ஆம் நூற்றாண்டுக் காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும், ஆவணமாகவும், இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று, தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை' இந்தியாவின் பெப்பிசு' எனவும் ' நாட்குறிப்பு வேந்தர்' எனவும் போற்றுகின்றனர். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ சம்பவங்களைகளைப் பற்றியும் அறிய முடிகிறது. மேலும்...