விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 17, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெர்ரி பாக்ஸ் கனடாவைச் சேர்ந்த தடகள விளையாட்டாளர் மற்றும் புற்று நோய் ஆய்வு செயற்பாட்டாளர். இவர் புற்றுநோய் ஆய்வு மேம்பாட்டு விழிப்புணர்வுக்காகவும் அதற்கான பணம் திரட்டலுக்காகவும் 1980 இல் கனடாவில் ஒரு குறுக்குச்சாலை ஓட்டத்தில் ஈடுபட்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்டத் தனது வலதுகால் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இந்த ஓட்டத்தை ஆரம்பித்தார். ஆனால் புற்றுநோய் அவரது நுரையீரல் வரை பரவி, ஓட்டத்தைத் தொடங்கி 143 நாட்களில் (5373 கிமீ) ஓட்டத்தை நிறுத்தவும், அவரது மரணத்துக்கும் காரணமானது. எனினும் அவரது ஓட்ட முயற்சி உலக முழுவதும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 1981 இல் நடந்த வருடாந்திர டெர்ரி பாக்ஸ் ஓட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். தற்போது இந்த ஓட்டம் புற்றுநோய் ஆய்விற்காக நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய ஒருநாள் நன்கொடை திரட்டும் நிகழ்வாக உள்ளது. 500 மில்லியன் கனடிய டாலருக்கும் மேலான பணம் அவர் பெயரில் திரட்டப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முந்தின இரவு டெர்ரி பாக்ஸ், டிக் டிராம் என்பவரின் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. புற்றுநோயின் பாதிப்பால் காலை இழந்த டிக் டிராம் நியூயார்க் நகரில் நெடுந்தொலைவு ஓட்டம் ஓடியவர். அக்கட்டுரையினால் உந்தப்பட்ட பாக்ஸ் 14 மாத பயிற்சி எடுத்துக் கொண்டார். மேலும்...


தெர்னாத்தே சுல்தானகம் என்பது இந்தோனேசியாவின் ஆகப் பழைய முஸ்லிம் அரசுகளில் ஒன்றாகும். இது பாப் மசூர் மலாமோ என்பவரால் 1257 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுல்தான் பாபுல்லாஹ் (1570–1583) என்பவரின் ஆட்சிக் காலமே இவ்வரசின் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் தெர்னாத்தே சுல்தானகம் இந்தோனேசியத் தீவுகளின் கிழக்குப் பகுதியின் பெரும் பாகத்தையும் பிலிப்பீன்சின் தென்பகுதியையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தெர்னாத்தே சுல்தானகம் அக்காலத்தில் உலகிலேயே ஆகக் கூடியளவு கிராம்பு உற்பத்தி செய்யும் இடமாகத் திகழ்ந்ததுடன், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் பிராந்திய வல்லரசாகவும் திகழ்ந்தது. தொடக்கத்தில் இவ்வரசின் பெயர் காப்பி இராச்சியம் என்றே இருந்தது. பின்னர் இதன் தலைநகரமான தெர்னாத்தே நகரின் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது. தெர்னாத்தே சுல்தானகமும் இதன் அண்டைய அரசாகிய திடோரே சுல்தானகமும் இணைந்த பகுதியே உலகின் மிக முக்கியமான கிராம்பு உற்பத்திப் பகுதிகளாக இருந்தன. அதன் காரணமாக, இவ்விரு அரசுகளின் ஆட்சியாளர்களே இந்தோனேசியத் தீவுகளிலேயே செல்வம் மிக்கோராயும் வல்லமை பொருந்தியோராயும் விளங்கினர். எனினும் இவ்விரு அரசுகளினதும் செல்வத்திற் பெரும் பகுதி ஒன்றுக்கொன்று போரிடுவதிலேயே வீணாகியது. மேலும்...