விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 11, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில்வியா பிளாத் (1932-1963) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகிறார்; பாவமன்னிப்பு வெளிப்பாடு கவிதைப்பாணியை முன்னெடுத்துச் சென்றதில் இவரது பங்கு முக்கியமானது. கொலொசஸ் மற்றும் பிற கவிதைகள், ஏரியல் ஆகியன இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள். தி பெல் ஜார் என்ற பகுதி-தன்வரலாற்றுப் புதினத்தை விக்டோரியா லூகாஸ் எனும் புனைப் பெயரில் எழுதினார். 1982இல் இவரது கலக்டெட் போயம்ஸ் கவிதைத் தொகுப்புக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இறப்புக்குப் பின்னர் புலிட்சர் பரிசு பெற்ற முதல் கவிஞர் பிளாத். மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த பிளாத் எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னர் கவிஞரான டெட் ஹியூக்சை மணந்தார். உளச்சோர்வினால் நெடுநாட்கள் பாதிக்கப்பட்டு தன் கணவரைப் பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு, தற்கொலை குறித்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன. மேலும்...


சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு. இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பகுதி, இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை. 1600 இல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசி ஓர் ஆங்கிலேய வர்த்தகர் குழுமத்துக்கு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்னும் கூட்டுப் பங்கு நிறுவனத்தை உருவாக்க அனுமதி அளித்தார். இந்நிறுவனம் முதலாம் ஜேம்ஸ் மன்னரின் காலத்தில் இந்தியாவில் வர்த்தக நிலையங்களை அமைக்க முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியைப் பெற்றது. முதலில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் வர்த்தக நிலையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் சந்திரகிரி அரசரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கம்பனி நிருவாகி சர் பிரான்சிசு டே, மதராசப்பட்டினம் எனும் கிராமத்தருகே ஒரு வணிக நிலையத்தை நிறுவ நிலஉரிமை பெற்றார். மேலும்...