விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 10, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவில்லிப்புத்தூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது. திருவில்லிபுத்தூர் தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற பென்னிங்டன் நூலகம் ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. திருப்பாவை என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும். திருவில்லிபுத்தூர் இங்கு அமைந்துள்ள ஆண்டாள் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. பெரியாழ்வார் இயற்றிய "திருப்பல்லாண்டு", ஆண்டாள் இயற்றிய "திருப்பாவை", "நாச்சியார் திருமொழி" ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.தமிழ்நாடு அரசு சின்னத்தில் திருவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. மேலும்...


இலங்கை யானை என்பது அடையாளம் காணப்பட்ட மூன்று ஆசிய யானைத் துணை இனங்களில் ஒன்றும், இலங்கையை வாழ்விடமாகக் கொண்டதும் ஆகும். 1986 இல் இருந்து இலங்கை யானை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டது. 60-75 வருட கணக்கெடுப்பில் கடந்த மூன்று தலைமுறைகள் 50% ஆக குறைவடைந்து காணப்படுகின்றது. இவ்வினம் வாழ்விட இழப்பு, சீர்கேட்டு நிலை, பிளவு என்பவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.உடவளவை தேசியப் பூங்கா, யால தேசிய வனம், வில்பத்து தேசிய வனம், மின்னேரியா தேசிய வனம் ஆகியன இலங்கை யானைகளைக் காணக்கூடிய முக்கிய இடங்களாகும்.பொதுவாக ஆசிய யானைகள் அவற்றின் தும்பிக்கை முனையில் ஒன்றை விரல் போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கும். பெண் யானைகள் ஆண் யானைகளைவிட சிறியதாகவும் தந்தம் சிறியதாகவும் அல்லது தந்தமற்றும் காணப்படும். பெரிய விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள யானைகள் 150 கி.கி தாவரங்களை ஒரு நாளைய உணவாகக் கொள்ளும். இவற்றின் தோல் நிறம் இந்திய யானைகளைவிட கருமையாகவும், அதிக மங்கல் புள்ளிகள் காதுகளிலும், முகத்திலும், தும்பிக்கையிலும், வயிற்றிலும் காணப்படும். 7 வீதமான ஆண் யானைகள் மாத்திரமே தந்தத்தினையுடையன.மேலும்...