விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 28, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலணி என்பது மாந்தர்கள் நடக்கும் பொழுதும் ஓடும் பொழுதும் தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் பனியில் இருந்தும் காக்கவும், மற்றும் சிறப்பான பிற தேவைகளுக்காவும் காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். காலணிகளில் எளிதாக அணிந்து கொள்ளவும் கழற்றவும் வசதியான செருப்பு, மிதியடி போன்றவைகளும், புறங்கால்களையும் குதி கால்களையும் மூடியிருக்கும் ஷூ , பூட்ஸ் முதலிய கால்பூட்டணிகளும், கணுக்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும், கெண்டைக்கால், முழங்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும் உண்டு. கால்பூட்டணிகள் பெரும்பாலும் துணியால் அல்லது தோலால ஆன வாரினால் கட்டி முடிச்சிட்டு பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச் சூழல்களுக்கும், தொழில்களுக்கும், தட்ப வெப்ப தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாகும்.


நொதி அல்லது நொதியம் (enzyme) என்னும் புரதப் பொருளானது உயிரினங்களின் உடலில் நிகழும் வேதியியல் வினைகளை விரைவாக செய்யத்தூண்டும் ஒரு வினையூக்கி ஆகும். ஏறத்தாழ உடலில் உள்ள எல்லா செல்களின் இயக்கத்திற்கு தேவையான எல்லாவற்றுக்கும் இந் நொதியங்கள் தேவைப்படுகின்றன. இவ் வினையூக்கியாகிய நொதி இல்லாவிடில், சில வேதியியல் வினைகள் ஆயிரக்கணக்கான மடங்கு அல்லது மில்லியன் கணக்கான மடங்கு மிக மெதுவாகவே நடக்கும். இப்படி மெதுவாக நடக்க நேரிட்டால் ஓர் உயிர் வாழ இயலாது. எனவே நொதிகள் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.