விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 23, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு என்பது, இயேசுவின் இளமைப் பருவத்திற்கும் (12 வயது) அவர் தமது 30ஆம் வயதில் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கிய காலத்திற்கும் இடைப்பட்ட காலக் கட்டத்தில் அவர் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்குவதற்கான முயற்சியைக் குறிக்கும். கிறித்தவர்களின் புனித நூலாகிய விவிலியத்தில் காணப்படாத பல செய்திகளை உள்ளடக்கி, இயேசுவின் “மறைந்த வாழ்வு” பல விதங்களில் பல நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புனைவுகளை மைய நீரோட்ட கிறித்தவ சபைகள் உண்மையென ஏற்பதில்லை. புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களிலும் காணப்படாத செய்திகளைக் கூறுவதற்காக எழுந்த நூல்கள் பண்டைக் காலத்திலிருந்தே தோன்றியுள்ளன. இயேசுவைப் பற்றி குறிப்பாக இரண்டு காலக்கட்டங்கள் ”மர்மமாக” உள்ளன. இயேசுவின் இளமைப் பருவம் பற்றி நற்செய்திச் செய்திகள் பல உள்ளன. மேலும்...


சாலை இளந்திரையன் (1930-1998) தமிழ்ப் பேராசிரியர்; திறனாய்வாளர்; சொற்பொழிவாளர்; கவிஞர்; எழுத்தாளார்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் பிறந்தவர் சாலை இளந்திரையன். சென்னை மாநிலக் கல்லூரியில் கலை இளவர், கலை முதுவர் பட்டங்களையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். மாணவப் பருவத்திலேயே கதை, கவிதை, கட்டுரை என எழுத்துப்பணியில் ஈடுபட்ட சாலை இளந்திரையன் எழுபதிற்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். 1964 ஆம் ஆண்டில் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் இணைந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவினர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது மாநாட்டில் கலந்து கொண்டு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கி முக்கியப் பணியாற்றினார். மேலும்...