விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 23, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. கொடும் விலங்குகளான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.


பிபனாச்சி எண்கள் (Fibonacci numbers) என்பவை கணிதத்தில் பரிச்சயமில்லாதவர்களையும் ஈர்க்கும் ஒரு சுவையான கணிதப்பொருள்.

வடமொழியில் 'சந்தஸ் சாஸ்திரம்' (சீர் இயல்) என்று பிங்களர் கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதிய நூலில் 'மாத்ரா மேரு' என்ற பெயரில் இந்த எண்கள் பற்றி முதன் முதல் பேசப்பட்டது. 6ஆம் நூற்றாண்டில் விரஹங்கர் எழுதிய யாப்பிலக்கண நூல்களில் மறுபடியும் பேசப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் ஹேமசந்திரர் என்பவருடைய நூலிலும் விரஹங்கர் நூலுக்கு கோபாலர் எழுதிய உரைநூலிலும் இது விபரமாகப் பேசப்படுகிறது.

மேற்கத்திய வரலாற்றில் லியனார்டோ டா வின்சி (அவருடைய இன்னொரு பெயர் ஃபிபனாச்சி) எழுதிய "லிபர் அபேஸி" (1202) என்ற இலத்தீன் நூலில் முதன் முதல் பேசப்பட்டு இன்றும் பல அறிவியல் துறைகளிலும் அவருடைய பெயரைத் தாங்கி நிற்கும் பொருள் இது.