விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 20, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கெண்டைமீன் தமிழ்நாட்டில் உள்ள நன்நீர்நிலைகளில் பரவலாகக் காணப்படுகிறது. இம்மீன் குடும்பத்திற்குள், 12-15க்கும் இடைப்பட்ட பேரினங்களும், 180-210 சிற்றினங்களும் உள்ளன. இதன் தாயகம் ஐரோப்பாவும், ஆசியாவும் ஆகும். எனினும், உலகின் பல நாடுகளில் பணத்திற்காகவும், நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைக் கட்டுபடுத்தவும், அழகுணர்வுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டு, அப்புதிய சூழ்நிலையில் இவை நிலைத்து வாழ்கின்றன. 'கிண்டு' என்பதற்கு புரட்டிப்போடு, ஒரு வகை ஒலி என்ற பொருட்கள் உண்டு. இக்குடும்பத்தில் அடங்கும் மீன்கள் ஒவ்வொன்றின் கீழ்வாயிலும், கிண்டுவதற்கு ஏற்ப, கீழ்பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு சிறுபகுதிகள் உள்ளன. அதனால் கெண்டை (கிண்டு+ஐ)என்ற சொல் உருவானது என்பர். ஆற்றில் வாழும் சில கெண்டைமீன்களின் தேவைகளும் நடத்தையும் கட்டமைப்பும் வேறு வகையானவை. இது மற்ற மீன்களை வேட்டையாடுவதில்லை. பூச்சிகளின் லார்வாக்கள், மெல்லுடலிகள், புழுக்கள் போன்ற நுண்ணிய சிற்றுயிர்களையும் நீர்த் தாவரங்களையுமே இது உணவாகக் கொள்கிறது. மேலும்..


அலெக்சாண்டர் குப்ரின் (1870-1938) புகழ்பெற்ற உருசிய எழுத்தாளர். உருசிய சிறுகதைகளில் சாதனைகள் புரிந்தவர். 1896 இல் வெளிவந்த மலோஹ் என்ற குறுநாவல் குப்ரினைப் புகழ்பெறச்செய்தது. இரட்டையர் சண்டை (1905) அவரை உருசியர்களிடையே மிக விரும்பத்தக்கவராக நிலைநிறுத்தியது. போல்ஷெவிக் புரட்சி நிகழ்ந்தபோது குப்ரின் அந்த புரட்சியால் மக்கள் கொடுமைக்குள்ளாவதைக் கண்டு கொதிப்படைந்து உருசியாவை விட்டு வெளியேறி பாரிஸ் சென்றார். அங்கு குப்ரின் வறுமையில் இருந்தார். அங்கே இருக்கும்போது அவரால் எந்த இலக்கிய ஆக்கத்தையும் உருவாக்க முடியவில்லை. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல்நலத்தை இழந்தார். குப்ரின் நாடு திரும்பினார். இதனை முதலாளித்துவ ஐரோப்பாவின் தோல்வி என்று இடதுசாரிகள் எழுதினார்கள். ஸ்டாலினியத்தை துதித்து எழுதும்படி அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அதற்கு அவர் மறுத்தார். உருசியாவிற்கு மீண்டால் எழுத முடியும் என்ற அவரது கனவு வீணாகியது. நாடு திரும்பியபின் குப்ரின் எதையுமே எழுதவில்லை. மேலும்..