விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 19, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்காப்பு உடன்பிறப்பு என்பது சில மிகக் கடுமையான நோய்கள் கொண்ட ஒரு குழந்தையைக் காப்பதற்காகப் உடன்பிறப்பாகப் பிறக்கும் குழந்தை ஆகும். ஃபன்கொனியின் இரத்தச்சோகை போன்ற சில மரபியல் தொடர்பான நோய்களுக்கு உயிரணு மாற்றச் சிகிச்சை தேவைப்படுகின்றது. இம்மருத்துவத் தீர்வு முறைக்குத் தேவைப்படும் உயிரணுக்களோ அல்லது ஏற்ற உறுப்புக்களோ தக்க மரபியல் ஒவ்வுமை கொண்டுள்ள நோயற்ற ஒருவரிடம் இருந்து பெறுதல் வேண்டும், இந்தத் தீர்வின் தேவைக்காக இந்நோய் இல்லாத உடன்பிறப்பு ஒருவரே உதவ முடியும். உயிர்காப்பு உடன்பிறப்பு உருவாக்கம் புற உயிர்க்கருக்கட்டல் முறைமூலம் வளர்த்தெடுக்கப்படுகின்றது. முதலாவது உயிர்காப்பு உடன்பிறப்பு அணுமருத்துவம் 2000 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. மொல்லி நாசு எனும் பெண் குழந்தை 1994ல் ஃபன்கொனியின் இரத்தச்சோகையுடன் பிறந்தது. 2000 இல் மின்னியாபோலிசு பல்கலைக்கழக மருத்துவமனையில் உலகின் முதல் உயிர்காப்பு உடன்பிறப்புக் குழந்தையான ஆதாம் நாசு பிறந்தது. ஆதாம் நாசின் தொப்புள்கொடியில் இருந்து குருதிக் குருத்தணுக்கள் எடுக்கப்பட்டு மொல்லி நாசின் என்புமச்சைக்குள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. மேலும்...


பண்டிதமணி மு. கதிரேசனார் (1881-1953) ஏழு மாதங்கள் கூட பள்ளியில் படிக்காமல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். வடமொழி நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர். பல தமிழறிஞர்களுக்குப் பாடம் சொன்னவர். சிறந்த சொற்பொழிவாளர். இரு பொருள் படப் பேசுவதில் வல்லவர். தமிழாய்வு செய்து தமிழ்த்தொண்டாற்றியவர். மகிபாலன் பட்டியில் பிறந்த கதிரேசனார் சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாத நோயால் துன்புற்றார். 11ம் வயதில் தந்தையுடன் பொருளீட்டுவதற்காக இலங்கை சென்றார். தந்தையின் திடீர் மரணம் காரணமாக மிகவும் நலிவுற்ற நிலையில் 14ம் வயதில் ஊர் திரும்பினார். ஊன்று கோலின்றி நடக்க முடியாத நிலைக்கு ஆளானார். தமிழின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, ஓய்வு நேரத்தில் தமிழ் நூல்களை ஆசிரியர் இல்லாமலே ஆழ்ந்து கற்றார். தன் ஆருயிர் நண்பரான அரசஞ்சண்முகனாரிடம் பாடம் கேட்டார். மதுரை 'வித்யா பானு' அச்சகத்தின் உரிமையாளரான மு. ரா. கந்தசாமிக் கவிராயரின் நட்பு கதிரேசனாருக்குக் கிடைத்தது. இதன் பயனாய் இவர் வித்யாபானு இதழுக்குப் பல அரிய தமிழ்க் கட்டுரைகள் எழுதினார். மேலும்...