விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பிப்ரவரி 10, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூரோ 2012 எனப்படும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால் ஐரோப்பிய தேசிய ஆண்கள் அணிகளிடையே நடத்தப்பட்ட 14வது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஆகும். போட்டியின் இறுதிக்கட்டச் சுற்றை 2012 சூன் 8 முதல் சூலை 1 வரை போலந்தும் உக்ரைனும் இணைந்து ஏற்று நடத்தின; இரு நாடுகளுக்கும் இந்தப் போட்டியை நடத்தியது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் 51 நாடுகளுக்கிடையே ஆகத்து 2010 முதல் நவம்பர் 2011 வரை நடைபெற்று வந்தன. ஏற்று நடத்தும் போலந்து, உக்ரைனைத் தவிர 14 நாடுகள் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.யூரோ 2012 போட்டிகளை போலந்து மற்றும் உக்ரைனில் நடத்துவதற்கு ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் செயற்குழுவில் வாக்கெடுப்பு மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட பின்னர் பல்வேறுச் சிக்கல்களால் இந்த இரு நாடுகளும் இப்போட்டிகளை நடத்துமா என்ற கேள்விக்குறி பலமுறை எழுந்தது. மேலும்...


மலட்டுத்தன்மை சிகிச்சை எனப்படுவது, ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை காணப்படும்போது, அந்நிலையை அகற்றி, குழந்தைப் பேற்றைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சிகிச்சை அல்லது மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பமாகும். இந்தச் சிகிச்சைகள் கடினமானவையாகத் தோன்றினாலும், மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் சிகிச்சைக்குட்படும்போது, மன அழுத்தம் குறைவாகி சிகிச்சை வெற்றியளித்து, குழந்தையைப் பெற்றுக்கொள்ளல் இலகுவாகும். உண்மையில் மலட்டுத்தன்மையற்ற பெற்றோராக இருப்பினும், கடத்தப்படக்கூடிய எய்ட்சு போன்ற தொற்று நோய்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களில் காணப்படுமாயின், கருத்தரிப்பின்போது அவ்வகை நோய்கள் நோய்த்தொற்று மூலம் குழந்தைக்கும் வருவதனைத் தவிர்ப்பதற்காகவும் இவ்வகையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.மேலும்...