விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 8, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மழைநீர் சேகரிப்பு என்பது மழைநீரைத் திரட்டி, ஒருங்கே குவித்து, சேமித்து வைப்பது ஆகும். மழைநீரை சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கு, கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பயன்படுத்தலாம். மழைநீர் வீடு அல்லது நிறுவனங்களின் கட்டடங்களின் மேற்கூரைகளிலிருந்தும் அல்லது இதற்காகத் தயார் செய்யப்பட்டத் தரைவழியாகவும் சேகரிக்கப்படும். சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, அதிகச் செலவு பிடிக்காத சிக்கனமான நீர் ஆதாரம் ஆகும். மழைநீர் சேகரிப்பு ஒருங்கியம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களைக் கொண்டு எளிதாகக் கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தக்கூடியதும் ஆகும். கட்டடங்களின் மேற்கூரைகளில் சேகரிக்கப்படும் மழைநீரானது, பெரும்பாலும் நல்ல தரமானதாகவும் அதிக சுத்திகரிப்புக்கு உட்படுத்தத் தேவையில்லாததாகவும் இருக்கிறது. வேறுவகை நீராதாரம் இல்லாதபட்சத்தில், ஆண்டு மழைப்பொழிவு 200மிமீக்கு அதிகமுள்ள இடங்களில் குடும்பத்தின் குடிநீர் தேவைக்காக மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்துவது சிறப்பானது ஆகும்.


கணிமி என்பது ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும். நிலைக்கருவற்ற உயிரிகளில் நிறைந்து காணப்படும். பின்னாளில் நிலைக்கரு உயிரினமான ஓர் உயரணு இயீசுட்டில் (yeast) 2 மைக்ரோன் (2 micron) கணிமி கண்டுபிடிக்கப்பட்டது. இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை. கணிமிகள் குழலிணைவு (conjugation) என்னும் நிகழ்வு மூலம் ஒரு உயிரணுவில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு இன உயிரணுக்கள் இல்லாமல் அல்லது பாலுறவு இல்லாமல் மரபணு கடத்தப்படும் நிகழ்வுக்கு பாலுறவு சாரா மரபணு கடத்தல் (horizontal gene transfer) எனப்பெயர். கணிமிகள் தாம் இருக்கும் உயிரினத்துக்கு ஓர் எதிப்புத் தன்மையை அல்லது குழலிணைவு என்னும் நிகழ்வுக்கு உதவி புரிபவையாக இருக்கின்றன.