விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 7, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெந்நீரூற்று (Geyser) என்பது நீரானது, நீராவியுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் கிளர்ந்தெழுந்து, மேல்நோக்கி மிகவும் வேகத்துடன் வெளியேற்றப்படுவதாகும். குறிப்பிட்ட சில நீர்நிலவியல் நிலைமைகளில் மட்டுமே இவ்வாறான வெந்நீரூற்றுகள் காணப்படுவதால் இது ஒரு அரிதான தோற்றப்படாகவே கருதப்படுகிறது. பொதுவாக இவை இயக்கநிலையிலுள்ள எரிமலைகள் இருக்கும் இடங்களில், பாறைக் குழம்புகளுக்கு அண்மையாகவே தோன்றியிருக்கும். நிலநீர் நிலத்தினடியில் கிட்டத்தட்ட 2000 மீட்டர் ஆழத்தில் சூடான பாறைகளைத் தொட்டுச் செல்லும். அப்போது உருவாகும் அழுத்தம் கூடிய கொதிக்கும் நீர் நிலத்துளைகளூடாக சூடான ஆவியுடன் கூடிய நீரை வேகத்துடன் வெளியேற்றும் செயற்பாட்டினால் இவை உருவாகின்றன. வெந்நீரூற்றுப் பகுதியில் ஏற்படும் கனிமப் படிவுகள், அருகில் ஏற்படும் எரிமலை வெடிப்புக்கள், ஏனைய அருகாமையிலுள்ள பீறிட்டு மேலே நீர் பீச்சியடிக்காமல் காணப்படும் வெந்நீரூற்றுக்களின் தாக்கம், மனிதர்களின் குறுக்கீடுகள் போன்றவற்றால், ஒரு வெந்நீரூற்று இடையே நிறுத்தப்படவோ, அல்லது முற்றாக நின்று போகவோ நேரலாம். மேலும்


பரமசிவ சுப்பராயன் (1889–1962) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராவார். இவரது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் முதன் முறையாக அரசாங்க வேலைகளில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை கொண்டுவரப்பட்டது. திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதுவர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மாகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்சுபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப்பயிற்சி பட்டமும் பெற்றவர். 1922 இல் தென்மத்திய பிரதேச நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926 இல் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும்..