விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 27, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Jelly cc11.jpg

சொறிமுட்டை என அழைக்கப்படும் உயிரினம் கடலில் மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வுயிர்கள் கடலுயிரினங்களிலேயே அழகானதும் ஆட்பறிக்கக்கூடியதுமான படைப்பாகும். சொறிமுட்டைகள் இவ்வாழப்பகுதிகளில் தான் காணப்படும் என்று வரையறுக்கவியலா அளவுக்கு அவை பரந்த நீர்நிலைகளில் காணக்கூடிய உயிராக இருக்கின்றன. அவை கரையில் ஒதுங்கிக் கிடக்கும் போது மிக அழகான உயிரினமாகவும் கடற்பகுதிகளில் உலாவிக்கொண்டிருக்கும் போது மிகுந்த தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினமாகவும் இருக்கின்றன. இதுவரை 2000க்கும் மேற்பட்ட சொறிமுட்டைச் சிற்றினங்கள் உலகில் அறியப்பட்டுள்ளன. இவை கடலின் கொடிய ஆழத்திலும் உலவும் பண்புள்ளதால் இன்னும் அனேக இனங்கள் அறியப்படாமல் இருக்கின்றன. இதன் உடற்தோற்றம் மைய அச்சிலிருந்து உடல் வட்டமாக வரையப்பட்டதைப் போன்றும் அவை சிறப்பான சமச்சீர்மையான நிலையில் காணக்கூடியதாக வுள்ளன. இதன் சமச்சீர்மையான தோற்றம் உடலின் எந்தப் பகுதியிலிருந்து இடையூறுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலுடையவைகளாக இருக்கின்றன. இதன் உடலில் நரம்பு மண்டலங்கள் மட்டும் இருக்கின்றன. மேலும்..


Rhenius.jpg

சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் (1790-1838) செருமனியில் பிறந்து தமிழ்நாட்டில் கிறித்தவ மதப் போதகராகப் பணியாற்றியவர். சமயப் பணியுடன் தமிழ் இலக்கியப் பங்களிப்பும் செய்தவர். சாதீயப் பாகுபாடுகளைப் போக்கி சமத்துவக் குடியிருப்புகளை உருவாக்கியதுடன் பெண்கள் கல்விக்கு முன்னின்று பள்ளிகளைத் தொடங்கியவர். சமூகத்திற்கு உதவும் பல சங்கங்களைத் தோற்றுவித்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த இவர் 1814 இல் இந்தியாவுக்கு ஊழியராய் வந்தார். தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்பு சென்னை சென்றார். செருமானியப் போதகர்கள் ஆங்கிலிக்கன் திருச்சபையை அனுசரித்துப் போக வேண்டும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ரேனியசால் அது இயலவில்லை. எனவே சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்டார். தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல பாடசாலைகளைத் தோற்றுவித்தார். வேளாளரை மட்டுமின்றி, முதன் முறையாக நாடார்களை ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது. மேலும்...