விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 21, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓசிமாண்டியாசு (Ozymandias) என்பது 1818 இல் சோனட் வகையில் பெர்சி பைஷ் ஷெல்லி எழுதிய ஒரு புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை. வெளியாகி கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் ஆன பின்பும், பல கவிதைத் தொகுப்புகளில் இக்கவிதை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இக்கவிதையை ஷெல்லி தன் நண்பரும் சக கவிஞருமான ஒரேசு சிமித்துடன் நடந்த ஒரு போட்டியின் காரணமாக எழுதினார். பண்டைய எகிப்தின் பேரரசர்களுள் ஒருவரான இரண்டாம் ராமேசசின் பெரும் சிலை (படம்) ஒன்றின் தாக்கத்தினால் இக்கவிதை எழுதப்பட்டது. இதன் தனித்துவமான சொல்நடையும், காட்சியமைப்பும், கருத்தாழமும் ஆங்கிலக் கவிதையுலகில் இதற்கு அழியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ஓசிமாண்டியாஸ் சொல்லும் நீதி, எவ்வளவு பெரிய பேரரசாயினும் ஒரு நாள் அழிந்து போகும்; பலம் வாய்ந்த சர்வாதிகாரிகள் ஒரு நாள் உலக நினைவிலிருந்து மறைந்து போவர் என்பதே. இக்கருத்தினை ஷெல்லி அற்புதமான காட்சியமைப்பின் மூலமும் உரத்து படிக்க ஏற்ற மொழிநடையில் வெளிக் கொணர்ந்துள்ளார். மேலும்..


பத்திரிசு லுமும்பா (19251961) ஆபிரிக்கத் தலைவரும் காங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமது நாட்டை விடுதலை பெற உதவியவர். 1960 இல் பிரசெல்சில் நடந்த மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்ட அதே ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்று லுமும்பா காங்கோ குடியரசின் பிரதமரானார். விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார். ஆனாலும் 10 வாரங்களுக்குப் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. சனவரி 17, 1961 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். லுமும்பா சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் மூன்று வாரங்களுக்குப் பின்னர் உள்ளூர் வானொலி தகவல் தந்தது. மேலும்..