விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 20, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம் என்பது மொரோக்கோவின் ஃபிசு நகரில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1947 இற் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டதாயினும் இதன் தொடக்கம் பொ.கா. 859 ஆம் ஆண்டிலாகும். அப்போது இது ஒரு மத்ரசாவாக, அதாவது பள்ளிவாசற் பள்ளிக்கூடமாக நிறுவப்பட்டது. கரவிய்யீன் மத்ரசா முஸ்லிம் உலகின் முதன்மையான ஆன்மீகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளதுடன் இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றது. நடுக் காலத்தின் போது முஸ்லிம் உலகுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிற் கல்வி மற்றும் பண்பாட்டுத் தொடர்பினைப் பேணுவதில் இந்த மத்ரசா மிகச் சிறப்பான பங்கு வகித்துள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தின் போது ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்புகளுக்காகப் பெரிதும் உதவிய வரைபடங்களை வரைந்திருந்தவரான வரைபடக் கலை வல்லுநர் முகம்மது அல்-இத்ரீசி சில காலம் இங்கு பயின்றதாக அல்லது பணியாற்றியதாகக் கருதப்படுகிறது. பல்கலைக்கழக மட்டத்திலான பட்டங்களை வழங்குவனவும் பன்னெடுங்காலமாகத் தொடர்ச்சியாக இயங்குவனவுமான நிறுவனங்களில் இதுவே உலகிலேயே மிகவும் பழைமையானது எனக் கின்னசு உலக சாதனை நூல் சான்று வழங்கியுள்ளது. மேலும்..


சேர் ஆர்தர் சி. கிளார்க் (1917–2008) பிரித்தானிய அறிவியல் புதின எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஏறத்தாழ 100 புத்தகங்களுக்கு ஆசிரியரான இவர் அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவுக்கு பயன்படுத்தினார். நம் உலகத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதரின் தலைவிதி பரந்துள்ளது என்ற கருத்தை வலுவாக முன்னிறுத்தினார். 2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி என்ற புதினமும் 1968 இல் அதே பெயரில் இவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படமும் இவரது இந்த தொலைநோக்குக்கு, மிகத் தெள்ளத் தெளிவான சான்றுகளாகும். புவியில் இருந்து பார்க்கும் பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதிகளை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்று அறிவியல் புகழ்பெற்ற கருத்தை இவர் 1945 இல் முன்வைத்தார். 1962-ல் இவர் போலியோ நோயினால் தாக்குண்டார். தன் கற்பனைக்கும், சிந்தனைக்கும், எழுதுவதற்கும் ஏற்ற அமைதியான இடமாக இலங்கையில் கொழும்பைத் தேர்ந்தெடுத்தார். 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் குடியேறி அங்கிருந்து தனது எழுத்துக்களையும் ஆய்வுகளையும் தொடர்ந்தார். மேலும்...