விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 18, 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டுப் பாதை என்பது பண்டைக் காலத்தில் கவிகை வண்டிகளும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் சாங்கான் (Chang'an) பகுதியை சின்ன ஆசியாவின் அன்டியோச்சுடன் இணைத்தது. இது 8000 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது. இதன் செல்வாக்கு ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது. பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.


புலி ஒரு காட்டு விலங்காகும். உடலில் இருக்கும் பட்டை பட்டையான அமைப்பை வைத்து புலிகளை அடையாளம் காணலாம். காட்டுக்குள் சராசரியாக 15 வருடங்கள் வாழும் புலிகள் காடு அல்லாத சூழ்நிலையில் வாழும் காலம் 16 முதல் 18 வயது வரையே. நிலத்தில் மட்டுமல்ல நீரிலும் புலிகளுக்கு ஆற்றல் அதிகம். ஆறு-எட்டு கி.மீ. அகலமுள்ள நதிகளை சர்வசாதாரணமாக நீந்தவல்ல புலிகளால் 29 கி.மீ வரை நீந்த இயலும். தாக்குதல் காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதவிதமான தகவல் தொடர்பை புலிகள் கையாளுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். வங்காளப் புலி இந்தியாவின் தேசிய விலங்காகும். உலகில் உள்ள மொத்தப் புலிகளில் இராயல் பெங்கால் புலி எனப்படும் வங்காளப் புலிகளே 80% ஆகும். இவை இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படுகின்றன. பெரும்பான்மையாக புலிகள் ஆசிய நாடுகளிலேயே காணப்படுகின்றன.