விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 17, 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார். மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.


நாட்டார் பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும். இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.