விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 11, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டான்ஸ்ரீ டாக்டர் பி. சி. சேகர் எனப்படும் பாலசந்திர சகிங்கல் சேகர் மலேசிய இயற்கை ரப்பருக்கு புதிய வடிவத்தைக் கொடுத்தவர். மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரை ஒரு புது வடிவத்திற்கு மாற்றியவர். 'நவீன இயற்கை ரப்பர் மற்றும் செம்பனைத் துறைகளின் தந்தை' என்று போற்றப்படுகிறவர். 1949-இல் மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் ஒரு சாதாரண வேதியியலாளராகச் சேர்ந்து பின்னர் அதன் தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் மலேசியர், முதல் இந்தியர் மற்றும் முதல் ஆசியர். அதனை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டியவர். இயற்கை ரப்பர் தொழில்துறையில் புரட்சிகளைச் செய்தவர். இயற்கை ரப்பரின் பயன்பாடுகளுக்கு எஸ்.எம்.ஆர் எனும் புதிய தர ரப்பர் முறைமையை அமைத்துக் கொடுத்தவர். பி. சி. சேகர் 1929, நவம்பர் 17ஆம் தேதி சுங்கை பூலோவில் இருந்த உலு பூலு தோட்டத்தில் பிறந்தார். டில்லி பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று, பின்னர், அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றார். மேலும்...


தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர் தென்காசி நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆவர். பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து, தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (படம்) முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்துப் பாண்டியரும் தென்காசியையேத் தலைநகராகக் கொண்டு தென்காசி பெரியகோயிலில் உள்ள சிவந்தபாதவூரருடைய ஆதீன மடத்தில் முடி சூட்டிக் கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. மேலும்...