விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 1, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந்நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம். நோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது (infectivity), அந் நோய்க்காரணியானது ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள் பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும்.


தில்லி சுல்தானகம் என்பது 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளைக் குறிக்கும். பல்வேறு துருக்கிய, பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர். இவற்றுள் மம்லுக் வம்சம் (1206-90), கால்சி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் (1320-1413), சய்யித் வம்சம் (1414-51), லோடி வம்சம் (1451-1526) என்பன அடங்கும். கால்சிகள் குசராத்தையும், மால்வாவையும் கைப்பற்றியதுடன், முதன்முதலாக நர்மதை ஆற்றுக்குத் தெற்கே தமிழ் நாடு வரையும் படை நடத்திச் சென்றனர். தில்லி சுல்தானகத்தின் ஆட்சி தொடர்ந்து தென்னிந்தியாவுக்குள் விரிவடைந்தது. இக் காலத்தில் ஒன்றுபட்ட தென்னிந்தியா விசயநகரப் பேரரசின் தலைமையில் சில காலம் சுல்தானகங்களின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. எனினும் இறுதியில் விசயநகரப் பேரரசும் 1565 இல் தக்காணச் சுல்தானகங்களிடம் வீழ்ச்சியடைந்தது.