விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/திசம்பர் 20, 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நத்தார் ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும். இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது.மேலும்...


யாழ்ப்பாணம் என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12 வது பெரிய நகரமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும்...