விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 8, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் அணி (matrix) என்பது m வரிசை (அல்லது நிரை) களும் n நிரல்களும் கொண்ட ஒரு செவ்வகப்பட்டியல். வரிசைகளின் எண்ணிக்கையும் நிரல்களின் எண்ணிக்கையும் ஒன்றாக இருந்தால் அது சதுர அணி ( m = n) ஆகும். இப்பட்டியலில் உள்ள உறுப்புக்கள் எண்களாகத்தான் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் கணிதத்தில் எடுத்துக்கொள்ளப்படும் அணியின் உறுப்புக்கள் எண்களாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று கூட்டல் என்று வரையறை செய்யப்படும் செயலுக்கும் பெருக்கல் என்று வரையறை செய்யப்படும் செயலுக்கும் பொருள் கொடுப்பதாக இருக்கவேண்டும். முக்கியமாக எங்கெங்கெல்லாம் நேரியல் சமன்பாடுகள் அல்லது நேரியல் உருமாற்றங்கள் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் அணிகள் பயன்படும்.


இருகண் நோக்கி என்பது சற்று தொலைவில் உள்ள காட்சியைச் சிலமடங்கு பெரிதாக்கி, இரண்டு கண்களாலும் நேரடியாக நாம் காண உதவும், ஒரு சிறுதொலைவு நோக்கிக் கருவி. இக்கருவியைக் கொண்டு பார்க்கும் பொழுது தொலைவில் உள்ள பறவைகளும் பிறவும் மிக அருகில் இருப்பது போல இருக்கும். இக்கருவியில், நாம் காணும் பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள், இரண்டு குழல்கள் வழியாக நுழைந்து, தனித்தனியாக நம் இரு கண்களையும் வந்து அடைகின்றன. இதனால் இப்படி இரு கண்பார்வை ஒருசேர நேர்வதால், காட்சி நேரில் பார்ப்பதுபோலவே முத்திரட்சி (முப்பரிமாணம்) உடையதாக உள்ளது.