விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 4, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது. ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் தஞ்சைப் பகுதி அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்தது. மகளிர் மூவர், ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, மன்னன் புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசையோடு அம்மானைக் காயை வீசி விளையாடுவர். இவ்விளையாட்டில் மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ஏந்தி நிற்பர். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியை கூறிக் காயை வீசிப் பிடித்து “அம்மானை“ என்பாள். இரண்டாமவள் அப்பொதுச் செய்தியோடு பொருந்திய ஒரு வினாவைக் கேட்டுக் காயை வீசி “அம்மானை“ என்பாள். மூன்றாமவள் அவ்வினாவிற்கு இரு பொருள்படும்படி விடை கூறி காயை வீசிப் பிடித்து “அம்மானை“ என்பாள். இதுவே “அம்மானை“ விளையாடும் முறையாகும். மேலும்..


கப்ரேக்கர் (1905-1986), மகாராட்டிரத்தைச் சேர்ந்த கணிதவியலாளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக எண்கள்பால் ஈடுபாடு கொண்டு கணிதத்தில் ஆய்வு செய்தவர். எண்ணியலில் அவர் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். கப்ரேக்கர் மாறிலி, கப்ரேக்கர் எண் ஆகியவை அவரது கண்டறிதல்களே. முதுகலைப் பட்டம் பெறாதிருந்தும் அவர் எண்ணியலில் பல கட்டுரைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார்; அவரது பல எண்ணியல் வித்தைகள் விளையாட்டுக் கணிதத்தில் இன்று பயன்படுத்தப்படுகின்றன. பள்ளியில் அவர் ஒரு சராசரி மாணவனாக இருந்த போதிலும் எண்கள் உலகில் காணப்படும் எண்ணிலா விந்தைகளைக் கண்டு மனதைப் பறிகொடுத்து சிந்திக்கவும் தொடங்கினார். எண்களின் பலப் பல சிறப்பியல்புகளைத் தானே முனைந்து கண்டு பிடிக்கத் துவங்கினார். பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டே எண்கள் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டர். தன் கண்டுபிடிப்புகளை அறிவியல் கழகக் கூட்டங்களிலும். இந்திய கணிதவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டங்களிலும். நடைபெறும் கருத்தரங்குகளிலும் வெளிப்படுத்தினார். மேலும்...