விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 30, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யெரூசலம் அல்லது எருசலேம் என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது. எருசலேம் என்பது எபிரேய மொழியில் יְרוּשָׁלַיִם (யெருசலையிம்) என்றும், அரபியில் அல்-குத்சு (القُدس) என்றும் அழைக்கப்படுகிறது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். கிழக்கு எருசலேமையும் உள்ளடக்கிப் பார்த்தால் எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டின் மிகப் பெரிய நகரம் என்பது மட்டுமன்றி, மிகப்பெரும் மக்கள் எண்ணிக்கையைக் கொண்டுள்ள நகரமும் ஆகும். இந்நகரில் 801,000 மக்கள் வாழ்கின்றார்கள். இதன் பரப்பளவு 125 சதுர கி.மீ (48.3 சதுர மைல்) ஆகும். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும்......


இயல்நிலைப் பரவல் என்பது புள்ளியியலின், நிகழ்தவுக் கோட்பாட்டில், ஒரு தொடர் நிகழ்தகவுப் பரவலாகும். ஒரு சமவாய்ப்பு மாறியின் மெய்மதிப்புகள், சராசரி மதிப்பைச் சுற்றி நெருக்கமாக அணுகும் தோராயநிலையை விளக்குவதற்கு இப்பரவல் பெரும்பாலும் பயன்படுகிறது. புள்ளியியலில் இயல்நிலைப் பரவல் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இயல்நிலைப் பரவலைச் சேர்ந்த பெரும்பாலான முடிவுகளைத் தெளிவாகக் காண முடியுமென்பதால் இப்பரவலை பகுப்பாய்வு முறையில் விளக்க முடியுமென்பது முதல் காரணமாகும். சில எளிய நிபந்தனைகளின் கீழ், அதிக அளவிலான சமவாய்ப்பு மாறிகளின் கூடுதலானது இயல்நிலைப் பரவலைப் பின்பற்றுகிறது என்ற கூற்றை எடுத்துரைக்கும் மைய எல்லைத் தேற்றத்தின் பின்விளைவாக இயல்நிலைப் பரவல் உருவானது நடைமுறை நிகழ்வுகளில் நாம் காணும் பலவகையான சமவாய்ப்பு மாறிகளை மாதிரிப்படுத்துவதற்கு இயல்நிலைப் பரவலின் மணிவடிவம் வசதியாக இருப்பது மற்றொரு காரணமாகும். இயல்நிலைப் பரவலானது புள்ளியியல், தாவரவியல் மற்றும் சமூக அறிவியலில் சிக்கலான தோற்றப்பாடுகளுக்கான எளிய மாதிரியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்.....