விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 29, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (1859-1919) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர், தமிழ் கிறித்தவக் கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராக இருந்தவர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராக பயிற்சி பெற்று பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது. இரண்டு பாகங்களாக வெளி வந்த இந்நூலில், மிகவும் அறியப்படாத பல தமிழிசை இராகங்கள் ஆராயப்பட்டு சுமார் 95 பாடல்கள் வெளியிடப்பட்டன. அவரே இவற்றை எழுதி, ஒவ்வொன்றுக்கும் இசையமைத்து அவற்றின் சுரங்களையும் வெளியிட்டார். தனது இசையுலக தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். மேலும்...


விண்மீன் உயிரி அல்லது நட்சத்திர மீன்கள் என்பது முட்தோலிகள் தொகுதியைச் சார்ந்த, அசுட்டெரொய்டியா வகுப்பில் காணப்படும் உயிரினமாகும். உலகக் கடற்பரப்பில் ஏறத்தாழ 2000 விதமான விண்மீன் உயிரி இனங்கள் வசிக்கின்றன, இவை பெருங்கடற் பகுதிகளில் மட்டுமல்லாது துருவக் கடற்பகுதிகளிலும் காணப்படுகின்றன. அலையிடை மண்டலம் தொடங்கி ஆழ்கடல் மண்டலம் வரையிலான பெருங்கடலின் பல்வேறுபட்ட வலயங்களில் இவை வசிக்கின்றன. பலவகைப்பட்ட உடலமைப்புக்களையும் உணவருந்தும் முறையையும் கொண்டுள்ளன. சூழ்நிலையியல், உயிரியல் போன்றவற்றில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஊதாக் கடல் விண்மீன் போன்ற உயிரினங்கள் மறைதிறவு இனக் கருதுகோள் தொடர்பாகப் பரவலாக அறியப்பட்டவையாகும். கலிபோர்னிய கருநீலச்சிப்பி இனங்களை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் ஊதாக் கடல் விண்மீன்கள் சூழ்நிலையியல் சமநிலையைப் பேணுகின்றன. இத்தகைய விண்மீன்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் சிப்பிகளின் எண்ணிக்கை பெருகி, அவை உண்ணும் தாவர வகை அழிக்கப்படும், இது சூழ்நிலையைப் பாதிப்புக்குள்ளாக்கின்றது. மேலும்...