விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 26, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும். சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது. புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால நூல்களிலும், சங்க மருவியகால நூலான மணிமேகலையிலும், பெரியபுராணம், கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், திருவிளையாடற் புராணம் போன்ற பிற்கால நூல்களிலும் ஐம்படைத் தாலி தொடர்பான குறிப்புக்கள் உள்ளன. பிற்காலத்தில் இது பஞ்சாயுதம் என்றும் அழைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டில் இத்தகைய அணி சிறுவர்களுக்குக் காவலாக அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது ஆயினும் இன்று அருகிவிட்டது. இலங்கையில் இந்த வழக்கம் இன்றும் உள்ளது. ஐம்படை என்பது ஐந்து படைகள். இது ஐந்து ஆயுதங்கள் எனப் பொருள் படும். காத்தற் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து ஆயுதங்களை இச்சொல் குறிக்கும்.மேலும்..


ரோசா லக்சம்பேர்க் (18711919), போலந்தில் பிறந்த ஒரு செருமனிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும் ஒரு புரட்சியாளரும் ஆவார். செங்கொடி என்ற இதழை ஆரம்பித்தவர் இவரே. முதலாம் உலகப் போரில் செருமனி பங்குபற்றியதை செருமனி சமூக-சனநாயகக் கட்சி ஆதரித்ததைத் தொடர்ந்து இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெக்ட்டுடன் இணைந்து "புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி" என்ற அமைப்பை உருவாக்கினார். இதுவே பின்னர் செருமனிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரைப் பெற்றது. ஸ்பர்டாசிஸ்ட் லீக் தலைமையில் சனவரி 1919 இல் நடத்தப்பட்ட பெர்லின் புரட்சி தோல்வியில் முடிந்தது. ரோசா லக்சம்பேர்க்கின் ஆதரவிலான இப்புரட்சி ஃப்ரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவக்குழுவினரால் நசுக்கப்பட்டது. ரோசா மற்றும் லீப்னெக்ட் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் இறப்பின் பின்னர் ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் இருவரும் சனநாயக சோசலிஸ்டுகளாலும் மார்க்சியவாதிகளாலும் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர். மேலும்..