விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூலை 7, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவநேயப் பாவாணர் (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார். தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று வாதிட்டவர் மொழி ஞாயிறு தேவநேயப்பாவணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார். மேலும்...


குரான் அல்லது திருக்குரான்(குர்-ஆன் அரபி: القرآن அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, யிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நான்கு வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது. முகம்மது நபி, தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித் என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான் காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன. மேலும்...