விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூலை 25, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண் என்பது கணக்கிடப் பயன்படும் ஒரு அடிப்படையான நுண் கருத்துரு. கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. மனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கைவிரல்களை எண்ண எப்பொழுது தானே கற்றுக்கொண்டானோ அன்றே 'எண்' என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோன்றல்.

நடைமுறையில் மிகவும் பழக்கமான எண்கள், எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் இயற்கை எண்களாகும். இவைகளை இயல்பெண்கள் அல்லது இயலெண்கள் என்று குறிப்பிடலாம். இவை 0, 1, 2, ... என்பன. இவ்வெண் தொகுதி (அல்லது கணம்) என்னும் சிறப்பெழுத்தால் கணிதத்தில் குறிக்கப்படுகின்றது. இவற்றுடன் எதிர்ம எண்களையும் (-1, -2, -3, ...) சேர்த்து, முழு எண்கள் (integers) தொகுதி என அழைக்கப்படுகின்றது. இதன் குறியீடு .


வட கொரியா கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. வடகொரியாவின் தொன்ம வரலாறு கொரிய வரலாற்றோடு பிணைந்தது. வடகொரியாவின் அண்மைக்கால வரலாற்றையே இந்தக் கட்டுரை விபரிக்கின்றது.

5000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 1910 இல் ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, 1945 இல் இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய 'நேச நாடுக'ளான அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன.