விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 4, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொறியியல் என்பது அறிவியல் கோட்பாடுகளைத் திறமுடன் பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருளறிவியல், திண்ம / பாய்ம விசைப்பொறியியல், வெப்ப இயக்கவியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர்.


கணிதத்தில் பகுவியல் (Analysis) என்ற உப இயல் நியூடன் தொடங்கிவைத்த நுண்கணிதக்கருத்துகளில் விதையிடப்பட்டு, 17, 18, 19 வது நூற்றாண்டுகளில் ஆய்லர், லாக்ரான்ஜி, கோஷி, வியர்ஸ்ட்ராஸ், காஸ், ரீமான், ஜோசப் ஃவூரியே இன்னும் பலருடைய ஆய்வுகளினால் பெரிய ஆலமரமாக வளர்ந்துவிட்ட ஒரு மிகச்சிறந்த பிரிவு. இத்துறையினுடைய எண்ணப் பாதைகள் இயற்பியல், பொறியியல், இரண்டிலும் ஆழப்புகுந்து, 19 வது நூற்றாண்டின் பிற்பாதியில், அறிவியலில் எந்தப் பிரச்சினையானாலும் அதை சரியானபடி உருவகப்படுத்திவிட்டால் கணிதம் அதைத் தீர்வு செய்துவிடும் என்ற ஒரு நம்பிக்கையை அறிவியலுலகில் அனைவருக்கும் உண்டுபண்ணியது.