விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 18, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள் இந்தியா, வங்காளம், தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. பழமாகவும், பழரசமாகவும் மட்டுமல்லாது காயாகவும் பல வித உணவு வகைகளில் மாம்பழம் பயன்படுகிறது. மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அறியப்படுகின்றன. மங்கோ அல்லது மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும்.


கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் (கேட்க; Johann Carl Friedrich Gauss; ஜேர்மனி; 1777 1855) கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர். அவர் கணிதம், இயற்பியல், வானியல்,புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில், எண் கோட்பாடு, பகுவியல், வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் அடிக்கல் நாட்டி அவர் காலத்திலேயே கோபுரம் எழுப்பினவர். கணித இளவரசர் (இலத்தீன்: princeps mathematicorum) என்றும் அறியப்படுகிறார்.