விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 23, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாகும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூரின் வானிலை மிகவும் புகழ் பெற்றது. உடலுக்கு இதமான, குளிர்ச்சியான, பிற தென்னிந்திய நகரங்களைப் போன்று கூடுதல் வெப்பமில்லாத வானிலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் கடல்மட்டத்திற்கு 398 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும்...


பரலி சு. நெல்லையப்பர் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட வீரர், வ.உ.சி.க்குத் தொண்டர், சுப்பிரமணிய பாரதிக்குப் புரவலர் என்னும் பன்முகம் கொண்டவர் இவர்.நெல்லையப்பர் மெட்ரிக்குலேசன் வரை பள்ளியில் படித்தவர். அதற்கு அப்பால் தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார். 1907ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ.சி. நடந்திய சுதேசிய நாவாய்ச் சங்கத்தில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டில் சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் கலந்துகொள்வதற்கு வ.உ.சி. உள்ளிட்டவர்களைத் திரட்டுவதற்காகத் தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை வ. உ. சி.யின் வீட்டில் முதன்முறையாகக் கண்டார். அங்கிருந்த பாரதியாரின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றைப் படித்தும் இந்தியா இதழைப் படித்தும் பாரதிபால் அன்பு கொண்டார். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதி, நீலகண்ட பிரமச்சாரி, அரவிந்தர், வ.வே.சு.ஐயர் முதலிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரோடு தொடர்ந்து பழகிய நெல்லையப்பர் தானும் விடுதலைப் போராட்டங்கள் பலவற்றில் பங்கேற்றார். மேலும்