விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 18, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா. கொல்லவருசம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்க மாதத்தில் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி இது கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருவதாக கிபி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மகாபலி என்ற கேரள மன்னன் வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தன் மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் ஆண்டுக்கு ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணம் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள். மேலும்...


வடிவவியலில் எந்தவொரு முக்கோணத்துக்கும் ஒன்பது-புள்ளி வட்டம் வரைய முடியும். முக்கோணத்தின் ஒன்பது முக்கியமான புள்ளிகளின் வழியே செல்வதால் இந்த வட்டம் ஒன்பது-புள்ளி வட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நடுப்புள்ளிகள், மூன்று குத்துக்கோடுகளின் அடிகள், ஒவ்வொரு உச்சியையும் அதன் செங்குத்து மையத்தையும் இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி ஆகியன இந்தப் புள்ளிகளாகும். ஒரு முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டமானது, அம்முக்கோணத்தின் மூன்று வெளிவட்டங்களை வெளிப்புறமாகவும் உள்வட்டத்தை உட்புறமாகவும் தொடும் எனவும் 1822 -ல் கார்ல் ஃபோயர்பாக் கண்டு பிடித்தார். இக்கண்டுபிடிப்பு ஃபோயர்பாக் தேற்றம் என அழைக்கப்படுகிறது. ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் ஆரமானது, அம்முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் ஆரத்தைப்போல் இருமடங்காகும். மேலும்...