விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 11, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அச்சே சுல்தானகம் இன்றைய இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவின் வடகோடி மற்றும் அதனை அண்டிய சிறு தீவுகளில் அமைந்துள்ள அச்சே மாநிலத்தில் அமைந்திருந்தது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் அச்சே சுல்தானகம் அப்பிராந்தியத்தின் வலு மிக்க அரசாகத் திகழ்ந்தது. அதன் தலைநகராக குதராஜா எனப்பட்ட இன்றைய பண்டா அச்சே திகழ்ந்தது. அது மிக்க வன்மையாகத் திகழ்ந்த காலத்தில் மலாக்கா நீரிணையூடான வர்த்தகப் போட்டி மற்றும் அதனூடான மிளகு மற்றும் வெள்ளீய ஏற்றுமதி என்பவற்றிலான ஆதிக்கத் தேவை காரணமாக மலாயத் தீபகற்கத்தில் திகழ்ந்த ஜொகோர் சுல்தானகத்தினதும் மலாக்காவில் அரசு செலுத்திய போர்த்துக்கேயரினதும் மிகப் பெரும் எதிரியாக இருந்ததுடன் காலத்துக்குக் காலம் அதில் வெற்றியீட்டியும் வந்தது. அச்சே சுல்தானகம் அதன் இராணுவ வலிமை காரணமாக மட்டுமன்றி அதில் காணப்பட்ட இசுலாமிய அறிவு வளங்கள் மற்றும் வணிக வெற்றிகள் என்பவற்றுக்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அச்சே சுல்தானகத்தின் தோற்றம் 1471 இல் வியட்நாமியரால் சம்பா இராச்சியத்தின் தலைநகர் அழிக்கப்பட்ட பின்னர் அச்சே பகுதியில் தலைநகரை அமைத்து ஆட்சி செய்வதற்காக சம்பாவின் அரசரால் அவரது மகனை அனுப்பி வைத்ததுடன் தொடங்குகிறது. மேலும்...


சீகன்பால்க் (1682-1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது சீர்திருத்தத் திருச்சபையின் மத போதகர் ஆவர். டென்மார்க் மன்னர், டேனியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் குடியேற்றத்துக்குட்பட்ட பகுதிகளில் அருட்பணியாளர்களை அனுப்பி அருட்செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணம் கொண்டார். சீகன்பால்க் அருட்பணியாளாராகத் தேர்வு செய்யப்பட்டு ஹென்ரிச் புளுட்ச்சோ என்பவருடன் 1706-இல் தரங்கம்பாடியை வந்தடைந்தார். சீகன்பால்க் கடவுளுக்கான அருட்பணியை உடனே ஆரம்பித்தார். போர்ச்சுக்கீசத்தையும், தமிழையும் கற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெளிந்தார். பால்க்சீகன் 1708 இல் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1714 இல் சீகன்பால்குவினால் விவிலியம் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது என்பது சிறப்புக்குரிய ஒரு செய்தியாகும். மேலும்...