விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 29, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரைப்பைச்சாறும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுவதால் ஏற்படும் ஒரு நீண்டகால நோயாகும். இரைப்பைச்சாற்றில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென்சவ்வு பாதிப்புறுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இந்த நோய் தீவிரமடைகிறது, இந்நோயின் முக்கிய உணர்குறி நெஞ்செரிவு ஆகும். இரைப்பையும் உணவுக் குழாயும் சந்திக்கும் இடத்தில் காணப்படும் கீழ்க்கள இறுக்கி மூடப்படாது இருப்பதால் இரைப்பையை அடைந்த உணவு வகைகள் இரைப்பைச்சாற்றுடன் மீண்டும் உணவுக்குழாயை வந்தடைகின்றன. பிரிபடலப் பிதுக்கம், உடல் பருமன், உயர்கல்சியக்குருதி, தோல் தடிப்பு நோய் போன்றன இந்நோய்க்குரிய சில காரணிகளாகும். நீண்ட நாட்கள் உரிய சிகிச்சை வழங்கப்படாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில், உணவுக்குழாயின் மேலணி இழையங்கள் உருமாற்றத்துக்கு உட்பட்டு பரட்டின் உணவுக்குழாய் எனப்படும் புற்றுநோய்க்கு வழிகோலும் நிலைமை உண்டாகலாம். உணவுப்பழக்கங்களை உரிய முறையில் மாற்றுவது இந்நோய் வராது தடுக்கும் முறைகளில் ஒன்றாகும். மேலும்...


கேப்டன் லட்சுமி எனப்படும் இலட்சுமி சாகல் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படைபடைப்பிரிவின் தலைவி. மேலும் இவர் நேதாஜியின் ‘ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்தவர்; இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணம் பகுதியை சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு இந்திய மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் 23 சூலை, 2012 அன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவர் ஜான்சி ராணிப் படையில் பணியாற்றிய போது அப்படையில் உள்ள பெண்கள் பிரித்தானிய படையிடம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதால் நேதாஜி அப்படையினரை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால்... மேலும்...