விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 8, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பைங்குடில் விளைவு என்பது பூமியின் மேற்பரப்பிலுள்ள வெப்பக் கதிர்வீச்சானது, வளிமண்டலத்தில் இருக்கும் பைங்குடில் வளிமங்களினால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் எல்லாத் திசைகளிலும் கதிர்வீச்சாக வெளிப்படும் தோற்றப்பாடு ஆகும். இதனால் வளிமண்டலத்தின் வெப்பநிலை இருக்க வேண்டிய அளவைவிட அதிகரிக்கும். இது பசுமைக்குடில் விளைவினால் பூமியின் வளிமண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்பாகும். இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்வீச்சு, பூமியை அடையும்போது, வளிமண்டலத்திலுள்ள வளிமமும், முகிலும், நிலத்திலுள்ள மண்ணும், நீரும் ஒரு பகுதி ஒளிக்கதிர்களை தெறிப்பதனால், அவை மீண்டும் வளிமண்டலத்தை விட்டு மீண்டும் விண்வெளிக்குள் சென்று விடும். இன்னொரு பகுதிக் கதிர்வீச்சை நிலப்பகுதி உறிஞ்சி, அதன் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் கண்ணுக்குப் புலப்படும் ஒளியை விடக் கூடிய அலைநீளம் கொண்ட அகச்சிவப்புக் கதிரான வெப்பக் கதிர்வீச்சாக வெளியேற்றும். அந்த அகச்சிவப்புக் கதிர்களில் ஒரு பகுதி வளிமண்டலத்தினுள் வெளிவிடப்படுவதுடன், இன்னொரு பகுதி, வளிமண்டலத்தினூடாக விண்வெளியினுள் சென்று விடும். இதன்மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை சீராக வைத்துக்கொள்ளப்படும்.மேலும்...


தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால் தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும். தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும். சமற்கிருத சொற்களும் மணிப்பிரவாள அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாக பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும்...