விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 24, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதக் கூர்ப்பு எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஒரு உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ பேரினத்தின் கூர்ப்பு வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் ஒரு இனமாக ஓமோ சப்பியென்சுகளின் தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதக் கூர்ப்பு குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் இயற்பிய மானிடவியல், உயர்விலங்கினவியல், தொல்லியல், மொழியியல், மரபியல் என்பன அடங்குகின்றன. உயர்விலங்கினக் கூர்ப்பு, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்தில் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், புதைபடிவப் பதிவுகளின்படி பலியோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஒமினினி, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிற்றினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் கூர்ப்படைந்தது.மேலும்


காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான ஆற்று நீர்ப் பங்கீட்டுப் பிணக்கு ஆகும். காவிரியாற்றின் நீரை கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே நிகழ்ந்த இரு வேறு முரண்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு மத்திய அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும்...