விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 12, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புனித மரியா பெருங்கோவில் என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும். இலத்தீன் பெயரில் உள்ளதுபோல, தமிழில் "பனிமய அன்னையின் கோவில்" என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. இக்கோவில் உரோமை நகரில் "எஸ்குயிலின்" என்னும் ஒரு குன்றின் மீது கட்டப்பட்டது. தற்போது உள்ள கட்டடம் கிபி 432-440 ஆண்டுக் காலத்தில் திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு என்பவரால் எழுப்பப்பட்டு, புனித மரியாவின் வணக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. 431 இல் நிகழ்ந்த எபேசு பொதுச் சங்கத்தில் அன்னை மரியா கடவுளும் மனிதருமாகிய இயேசுவை இவ்வுலகிற்கு ஈன்றளித்ததால் உண்மையாகவே "கடவுளின் தாய்" என்னும் வணக்கத்துக்கு உரியவர் என்னும் கிறித்தவக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித மரியா கோவிலைப் புதுப்பித்து, விரிவாக்கி, அழகுபடுத்தினார். கோவிலில் உள்ள "வெற்றி வளைவு" என்னும் பகுதி அத்திருத்தந்தை காலத்தைச் சார்ந்ததே. அதில் "ஆயர் சிக்ஸ்துஸ் கடவுளின் மக்களுக்குக் கொடையாக அளித்தார்" என்னும் பதிவு உள்ளது. மேலும் ஐந்தாம் நூற்றாண்டு கலை அம்சங்களில் முக்கியமான ஒன்று கோவிலின் நடு நீள்பகுதியை அணி செய்கின்ற பதிகைக்கல் ஓவியங்கள் ஆகும். மேலும்..


பரமேசுவரா (1344-1414) என்பவர் மலாக்கா பேரரசை உருவாக்கியவர். இவருடைய மற்ற பெயர்கள் இஸ்கந்தார் ஷா, ஸ்ரீ மகாராஜா. இவர் துமாசிக் (இன்றைய சிங்கப்பூர்) எனும் இடத்தில் இருந்து வந்து மலாக்காவை 1402ல் உருவாக்கினார். ஜாவாவை ஆண்டு வந்த ஸ்ரீவிஜயப் பேரரசின் செல்வாக்கு 14ம் நூற்றாண்டில் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஜாவாவில் சிங்கசாரி எனும் ஓர் அரசு வலிமை வாய்ந்த பெரும் அரசானது. அரசக் குடும்பத்தினரும் பல ஆயிரம் மக்களும் பிந்தான் தீவில் அடைக்கலம் அடைந்தனர். 1324ல் பிந்தான் தீவில் இருந்து வந்த சாங் நீல உத்தமன் திடீரென்று துமாசிக்கின் மீது தாக்குதல் நடத்தி, சிங்கப்பூர் என்ற ஊரை உருவாக்கினார். இவருக்குப் பிறகு அவருடைய மகன் பராக்கிரம வீர ராஜா சிங்கப்பூரின் ராஜாவாகப் பதவி ஏற்றார். இவருடைய காலத்தில் மஜாபாகித் அரசு திடீரென்று சிங்கப்பூரின் மீது தாக்குதல் நடத்தியது. பரமேசுவரா சாங் நீல உத்தமனின் கொள்ளுப் பேரன் ஆகும். இவர் மஜாபாகித்தின் தாக்குதலில் இருந்து தப்பித்து தன்னுடன் சில நேர்மையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலப் பகுதிக்குள் நுழைந்து, அங்குள்ள மீன்பிடி கிராமம் ஒன்றை அடைந்தார். இக்கிராமமே இன்றைய மலாக்கா மாநகரம் உருவான இடம். வட சுமாத்திராவில் பாசாய் எனும் சிற்றரசின் இளவரசியைப் பரமேசுவரா 1409 இல் திருமணம் செய்து இசுலாமிய சமயத்தில் இணைந்து தன் பெயரை இஸ்கந்தார் ஷா என்றும் மாற்றிக் கொண்டார். மேலும்..