விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 10, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்நுட்ப வரலாறு என்பது கருவிகளையும் நுட்பக் கூறுகளையும் குறித்த கண்டுபிடிப்புகளின் வரலாறு ஆகும். இதனை மனிதத்தின் வரலாற்றோடு பலவழிகளில் ஒப்பிடலாம். மனிதன் முன்னேறியதால் கருவிகள் உருவாகின; கருவிகள் பயன்பாட்டால் மனிதன் முன்னேறினான். தொழில்நுட்பங்களால் அறிவியல் வளர்ச்சி வாய்த்தது; அறிவியல் வளர்ச்சி செல்லாதவிடங்களுக்குச் செல்லவும், பேரண்டத்தின் இயல்பை ஆராயவும் வழி வகுத்தது. தொழில்நுட்பப் படைப்புகள் பொருளாதாரத் தேவைகளால் எழுந்தன. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் தாக்கமேற்படுத்துகின்றன; சமூகத்தால் தொழில்நுட்பமும் தாக்கமடைகிறது. படை வலிமையை வளர்க்கவும் காட்சிப்படுத்தவும் தொழில்நுட்பங்கள் உதவியுள்ளன.. மேலும்


ஜே. ஆர். ஆர். டோல்கீன் (1892–1973) என்று பரவலாக அறியப்படும் ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் ஒரு ஆங்கில எழுத்தாளர், கவிஞர் மற்றும் பேராசிரியர். ஆங்கிலக் கனவுருப்புனைவு பாணியின் முன்னோடியாகக் கருதப்படுபவர். த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ், த ஹாபிட், தி சில்மரீலியன் ஆகியவை இவரது மிகவும் அறியப்பட்ட படைப்புகள். டோல்கீனுக்கு முன்பே பல எழுத்தாளர்கள் கனவுருப்புனைவுப் படைப்புகளை எழுதியிருந்தாலும் அவரது படைப்புகளே இருபதாம் நூற்றாண்டில் அப்புனைவுப் பாணிக்கு புத்துயிர் அளித்து வாசகர்களிடையே புகழ்பெறச் செய்தன. எனவே டோல்கீன் 'நவீன கனவுருப்புனைவு இலக்கியத்தின் தந்தை' எனக் கருதப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த டோல்கீன் தனது மூன்றாவது அகவையில் குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். மேலும்...