விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 9, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெங்கநாதன் விசைப்பலகை அல்லது இலங்கை சீர்தர விசைப்பலகை என்பது இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகைத் தளக்கோலமாகும். இலங்கையில் அரச அலுவலகங்களிலும் ஏனைய பணிகளிலும் தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கு இந்த விசைப்பலகைத் தளக்கோலமே அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசினால் முதலில் தமிழ் 99 விசைப்பலகைத் தளக்கோலமே சீர்தரமாக்கப்பட்டிருந்தபோதிலும் இலங்கைக் கணினிப் பயனர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் தமிழ் 99 கைவிடப்பட்டு ரெங்கநாதன் வடிவம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது சந்தையில் உள்ள மும்மொழி விசைப்பலகைகளில் இவ் இலங்கைச் சீர்தர விசைப்பலகைத் தளக்கோலமே பொறிக்கப்பட்டுள்ளது. ரெங்கநாதன் என்ற பெயர் இடப்பட்டமைக்கு தெளிவான காரணங்கள் எதுவும் உத்தியோகபூர்வமாகச் சொல்லப்படவில்லை. பாமினி வகைத் தளக்கோலங்களைக் குறிக்க பேச்சளவில் பயன்படுத்தப்பட்டு வந்த இச்சொல் தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரெமிங்டன் என்ற தமிழ் தட்டச்சுப்பொறியின் பெயர் மருவி ரெங்கநாதன் என்று ஆகியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. மேலும்..


சாமிக்கண்ணு வின்சென்ட் (1883 - 1942) தமிழ்த் திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவில் சலனப் படங்களைத் திரையிடத் தொடங்கிய இவர், பின்னாளில் கோயமுத்தூரில் மூன்று திரையரங்குகளை நடத்தினார்; பல தமிழ்ப் படங்களையும் தயாரித்தார். கோவையில் முதன் முதலில் மின்சாரத்தால் இயங்கும் அச்சகத்தையும், அரிசி ஆலையையும் நிறுவியவர் இவரே. கோவையின் முதல் மின்சார உற்பத்தி ஆலையும் இவரால் நிறுவப்பட்டதே. சென்னையில் எஸ்பளனேடு பகுதியில் எடிசன் சினிமா மெகாஃபோன் என்ற பெயரில் முதல் சினிமா கொட்டகையைக் கட்டினார். அதி நவீன எந்திரங்களை பயன்படுத்தி காட்டப்பட்ட அவரது படங்களைக் காண மக்கள் கூட்டமாக வந்தனர். இதனைத் தொடர்ந்து, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று படங்களைத் திரையிட்டார். துணிக் கூடாரத்தைவிட நிரந்தரமான ஒரு கட்டிடம் வேண்டுமென்பதை உணர்ந்த சாமிக்கண்ணு 1914 இல் கோவையில் வெரைட்டி ஹால் திரையரங்கைக் கட்டினார். (இப்போது அது டிலைட் தியேட்டர் என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது). மேலும்..