விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 8, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்சிக்குட்பட்ட பேரண்டம் என்பது பெருவெடிப்பு கோட்பாட்டில் மனிதர்களால் காணப்படக்கூடிய விண்மீன் பேரடைகளையும் அவை சார்ந்த பருப்பொருட்களையும் குறிக்கும். பொதுவாகப் பேரண்டம் என்றால் காட்சிக்குட்பட்ட பேரண்டம், கரும்பொருட்கள், கரும் ஆற்றல், ஒளி எல்லையைத் தாண்டியுள்ள பகுதி ஆகியவை அனைத்தும் உள்ளடங்கும். அண்டத்தின் எல்லையைப் பால்வழி மையத்திலிருந்து 1,00,008 கோடி ஒளியாண்டுகள் என வைத்துக்கொண்டால், அதில் பால் வழி மையத்திலிருந்து 4,650 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து மட்டுமே ஒளி மானிடரை வந்தடைந்திருக்கிறது. மீதமுள்ள முழு பகுதிகளையும் காண மானிடர்களுக்கு மேலும் 95,358 ஆண்டுகள் (1,00,008-4,650) ஆகும். ஒளி வந்தடைந்த பகுதிகள் காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனப்படும். காட்சிக்குட்பட்ட பேரண்டம் பால் வழி மையத்திலிருந்து எந்தக் கோணத்தில் பார்த்தாலும் குறைந்தது 1,400 கோடி புடைநொடி தூரத்தினைக் கொண்டிருக்கும். இதன் கொள்ளளவு 3.5 × 1080 கனசதுர மீட்டர்கள். மேலும்...


பேரரசன் அலெக்சாண்டர் (கிமு 356-323) கிரேக்கத்தின் பகுதியான மக்கெடோனின் மன்னன். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன் போற்றப்படுகிறான். இவன் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனது காலத்தில் பண்டைய கிரேக்கர்களுக்குத் தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான். தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தான். இவன் இறப்பதற்கு முன்பே, அரேபியக் குடாநாட்டுக்குள் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். அலெக்சாண்டர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான். இதனால் சில அறிஞர்கள் இவன் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான். பன்னிரண்டு ஆண்டு காலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான். மேலும்...