விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 5, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி. சதாசிவ ஐயர் (1882 - 1950) ஈழத்துத் தமிழறிஞரும், எழுத்தாளரும், புலவரும் ஆவார். சமக்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். காளிதாசரின் இருது சங்காரம் என்னும் காப்பியத்தை இருது சங்கார காவியம் என்ற பெயரில் தமிழிலே பாடல்கள் எழுதியுள்ளார். மட்டக்களப்பில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளை தேடி எடுத்து அவற்றை அச்சேற்றி நூலாக வெளியிட்டார். யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த இவர் கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றி பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாக பணியில் இருந்தார். மேலும்...


கணிதத்தில் நேர்மாறுச் சார்பு என்பது ஒரு சார்பினால் ஏற்படக்கூடிய விளைவை இல்லாமல் செய்யக்கூடிய விளைவுடைய மற்றதொரு சார்பாகும். x எனும் உள்ளீட்டின் ƒ சார்புக்குரிய வெளியீடு y எனில் நேர்மாறுச் சார்பு g ஆனது y -ஐ உள்ளிடாகவும் x -ஐ வெளியீடாகவும் கொண்டிருக்கும். அதாவது: :ƒ(x)=y எனில், g(y)=x. இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே குறியீட்டில் g(ƒ(x))=x எனக் குறிக்கலாம். சார்புகளின் சேர்ப்புச் செயலியைப் பயன்படுத்தி, g(x) சார்பை ƒ(x) சார்புடன் சேர்க்கக் கிடைக்கும் இப்புதுச் சார்பு மாறி x -ஐ எந்தவொரு மாற்றமுமின்றி அப்படியேத் திருப்பித் தருகிறது. ஒரு சார்புக்கு நேர்மாறுச் சார்பு இருந்தால் அச்சார்பு நேர்மாற்றத்தக்கச் சார்பு எனப்படும். நேர்மாற்றத்தக்க சார்புகளின் நேர்மாறுச் சார்புகள் தனித்தன்மை உடையவை. அதாவது ஒரு நேர்மாற்றத்தக்கச் சார்புக்கு ஒரேயொரு நேர்மாறுச் சார்புதான் உண்டு. ƒ சார்பின் நேர்மாறுச் சார்பின் குறியீடு: ƒ−1 இது f -ன் நேர்மாறு எனக் கூறப்படும். மேலும்...