விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 30, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் என்ற கட்டுரை தமிழகத் திரைப்படத்துறை திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் வகித்த பங்கை விவரிக்கிறது. திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வரவும் நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் நீடிக்கவும் தமிழ்த் திரைப்படங்கள் அவற்றுக்கு பெரிதும் உதவியுள்ளன. அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி ராமச்சந்திரன் மற்றும் செயலலிதா எனத் திரைப்படத் துறையினர் ஐந்து பேர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகப் பொறுப்பு வகித்துள்ளனர். 1930களின் மத்தியிலிருந்து பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் தமிழ்த் திரைப்படத் துறையினர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றி வந்தனர். 1937 சட்டமன்றத் தேர்தலில் பிரபல நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாள் இந்திய தேசிய காங்கிரசுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். எம். ஆர். இராதா தனது நாடகங்களின் வாயிலாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பி வந்தார். 1940களில் தி.க வில் அண்ணாதுரையின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியபின் திராவிட இயக்கத்துக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது. திமுகவின் ஆதரவாளர்கள் தயாரித்த திரைப்படங்களில் அதன் கொள்கைகளான திராவிட நாடு, இந்தி எதிர்ப்பு, பகுத்தறிவு போன்றவை வெளிப்படுத்தப்பட்டன.மேலும்..


கம்பளி யானை (woolly mammoth) என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் வடஅரைக் கோளத்தில் வாழ்ந்து வந்துள்ள பெரும் மிருக இனம். இவை இன்றைய யானைகளின் மூதாதையினராகக் கருதப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம்பளி யானைகள் என அழைக்கப்பட்டன. ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் இம்மிருகங்களின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வினம் பூமியிலிருந்து முற்றாக அழிந்து மறைந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். வட அமெரிக்காவிலும் வடக்கு யூரேசியாப் பகுதியில் சைபீரியாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், மற்றும் பனியில் உறைந்த எலும்புக்கூடுகள் ஆகியவற்றில் இருந்து இந்த விலங்குகள் பற்றி அறியவந்துள்ளது. குறைந்தது 150,000 ஆண்டு வயதான இவ்விலங்கு பற்றிய முதலாவது தரவு யூரேசியாவின் உறைபனிப் பரவலின் போது பெறப்பட்டது. சைபீரியாவின் துந்திரா பனிக்காட்டில் புதையுண்டிருந்த கம்பளி யானையொன்று 1999 இல் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சிதைவடையாத உடலைக் கொண்ட இந்த ஆண் யானை சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும்..