விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 8, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சயாம் மரண இரயில்பாதை அல்லது சயாம் - பர்மா இரயில்வே என்பது இரண்டாம் உலகப்போரின் போது நிர்மாணிக்கப்பட்ட 415 கி.மீ தொலைவு கொண்ட ஒரு புகைவண்டித் தொடர் பாலம். இந்தத் தொடர் தாய்லாந்தையும் பர்மாவையும் இணைக்கும் முயற்சியில் சப்பானியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இது மனித வரலாற்றில் மிகவும் துயரம் தோய்ந்த ஒரு ரயில்பாதை முயற்சியாக முடிந்தது. பல ஆசியத் தொழிலாளர்களும் போர்க்கைதிகளும் வலுக்கட்டாய வேலைகளுக்கு இப்பாதைக் கட்டுமானத்தில் உட்படுத்தப் பட்டதுடன் போதிய உணவு இல்லாமை, கொடிய மிருகங்களின் தாக்குதல் போன்றவற்றால் லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போயினர். நேதாஜியும் இந்த பாதையை பர்மிய எல்லையில் இருந்து இந்தியாவைப் பார்த்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பிய போது பயன்படுத்தினார். மேலும்...


ரோசலிண்ட் பிராங்க்ளின் (1920-1958) இலண்டனைச் சேர்ந்த அறிவியலாளர். உயிரியற்பியல் அறிஞர், வேதியியலாளர், மூலக்கூற்று உயிரியல் மற்றும் எக்சு கதிர் படிக வரைவி நிபுணர் எனப் பலவகைத் துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மரபணு, வைரசு, நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியவர். பிராங்க்ளின் 1951-1953 ஆம் ஆண்டு வரை மரபணு ஆய்வில் ஈடுபட்டு மரபணுவின் பதிப்பை எக்சு கதிர்களின் விளிம்பு விளைவுப் படிகவியல் மூலம் படம் பிடித்தார். வாட்சன், கிரிக் ஆகிய இருவரும் மரபணு வடிவத்தைக் கண்டறியும் ஆய்வில் அப்போது ஈடுபட்டிருந்தனர். மரபணு இழை சுருள் வடிவம் கொண்டது என்பதனை மெய்ப்பிக்க மிகச் சிறந்த ஆதாரம் பிராங்க்ளின் எடுத்த படமே என அவர்கள் உணர்ந்தனர். அதனைப் பயன்படுத்தி அவர்களின் ஆய்வைத் தொடர்ந்தனர். இந்த ஆய்வுகளில் அவர்கள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் வாட்சன், கிரிக், வில்கின்சு ஆகியோருக்கு பின்னால் நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும்...