விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 26, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யாவழி பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும். அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை. அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.


நாற்கொம்பு மான் (Tetracerus quadricornis) தெற்காசியாவின் திறந்தவெளிக்காடுகளில் வாழும் ஒரு மானினமாகும். இது இந்தியாவில் கங்கை நதியின் தெற்கிலிருந்து தமிழ் நாடு வரையிலும், ஒரிசா மாநிலத்திற்கு மேற்கிலிருந்து குசராத்தின் கீர் காடுகள் வரை வாழ்கின்றது. மேலும் இவ்வினத்தின் ஓரு சிறிய உயிர்த்தொகை நேபாளத்திலும் வாழ்கின்றது. கொப்புகளில் வளையங்கள் இல்லாமல் இருப்பது இந்த மான் குலத்தின் முக்கிய பண்பாகும், மேலும் இப்பண்பே இவற்றை மற்ற மானினத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.